வீரர்கள் இல்லை.. இந்திய அணியின் தோல்விக்கு அவர்தான் காரணம் - பாக். முன்னாள் வீரர் விமர்சனம்
|இங்கிலாந்தின் பேஸ்பால் அணுகுமுறையை கம்பீர் காப்பியடிக்க முயற்சித்ததாக பாசித் அலி விமர்சித்துள்ளார்.
லாகூர்,
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது. இதன் மூலம் சொந்த மண்ணில் 24 வருடங்களுக்கு பிறகு முதன் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. இந்த தோல்விக்கு நியூசிலாந்தின் சுழற்பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமாக அமைந்தது.
பெங்களூருவில் நடைபெற்ற 2-வது போட்டியில் சான்ட்னெர் சுழலில் சிக்கிய இந்தியா, மும்பையில் நடைபெற்ற கடைசி போட்டியில் அஜாஸ் சுழலில் மொத்தமாக அடங்கியது. இதுவே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்நிலையில் இந்த வரலாற்றுத் தோல்விக்கு புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர்தான் காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி விமர்சித்துள்ளார். குறிப்பாக இங்கிலாந்தின் பேஸ்பால் அணுகுமுறையை கம்பீர் காப்பியடிக்க முயற்சித்ததாக அவர் விமர்சித்துள்ளார். அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாட முயற்சித்ததே இந்த தோல்விக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இன்று இந்தியா கண்டிப்பாக டிராவிட்டை மிஸ் செய்யும். ஏனெனில் அவர் 4 நாட்கள் திட்டமிடுவார். ஆனால் இப்போது உள்ளவர்கள் 2 அல்லது இரண்டரை நாட்களுக்கு மட்டுமே திட்டமிடுகிறார்கள். இப்போதுள்ள பயிற்சியாளர்கள் கொடுக்கும் பேட்டியை நன்றாக பாருங்கள். அவர்கள் போட்டி டிராவில் முடிவடைவதை விரும்பவில்லை. அது சரிதான்.
ஆனால் ஐபிஎல் கோப்பையை வென்ற கையோடு வந்த நீங்கள் டெஸ்ட் போட்டிகளிலும் அதே போல பயிற்சியை கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. டி20 போல டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினால் அது உங்களுடைய ஆட்டத்தை பாழாக்கிவிடும். அனைவரும் இங்கிலாந்தின் பேஸ்பால் அணுகுமுறையை காப்பியடிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இதுவரை இங்கிலாந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு ஒரு முறையாவது தகுதி பெற்றுள்ளதா?
எனவே அது போன்ற அணுகு முறையில் விளையாடுவதில் என்ன பயன்? மும்பையில் நீங்கள் சுழலுக்கு சாதகமான மைதானத்தை அமைத்தீர்கள். ஆனால் அங்கே வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் 0 தன்னம்பிக்கை மட்டுமே கிடைத்தது. தற்போது அவர்கள் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் விளையாட செல்ல உள்ளனர். இங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லும்போது அவர்களுடைய தன்னம்பிக்கை என்னவாக இருக்கும்? ஜீரோவாக இருக்கும்" என்று கூறினார்.