என்னுடைய பேச்சை யாருமே கேட்கவில்லை - பி.சி.சி.ஐ. முடிவு குறித்து ஸ்ரேயாஸ் வருத்தம்
|உலகக்கோப்பை தொடருக்கு பின் ஏற்பட்ட முதுகு வலி குறித்த பிரச்சினைகளை அணி நிர்வாகத்திடம் கூறியபோது யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் முன்னேறி உள்ளன. இந்த வருடம் கொல்கத்தா அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் சிறப்பாக விளையாடி பைனல் வந்துள்ளது. ஏற்கனவே 2020 சீசனில் டெல்லியை பைனலுக்கு அழைத்து வந்த அவர் கொல்கத்தா அணியிலும் அசத்தி வருகிறார்.
முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையில் 500-கும் மேற்பட்ட ரன்கள் அடித்து இந்தியா பைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய ஸ்ரேயாஸ் ஐயர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார். அந்தத் தொடரில் காயத்தை சந்தித்து பாதியிலேயே வெளியேறிய அவர் விரைவாக குணமடைந்ததாக என்.சி.ஏ. அறிக்கை கொடுத்தது.
அதனால் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியது. ஆனால் அப்போது தம்முடைய காயம் முழுமையாக குணமடையாததால் தமிழ்நாட்டுக்கு எதிரான செமி பைனலில் தம்மால் விளையாட முடியாது என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார். இருப்பினும் என்.சி.ஏ. அறிக்கை வழங்கியதால் பொய் சொல்வதாக கருதிய பிசிசிஐ அவரை 2023 - 24 இந்திய கிரிக்கெட் அணியின் சம்பள ஒப்பந்தத்திலிருந்து அதிரடியாக நீக்கியது. அதன்பின் ஸ்ரேயாஸ் ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் மும்பை அணிக்காக களமிறங்கி விளையாடினார்.
இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காயமடைந்துள்ளேன் என்ற உண்மையை சொல்லியும் யாரும் தம்முடைய பேச்சை கேட்கவில்லை என்று ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-
"உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின் எனது முதுகு வலி பிரச்சினைகள் குறித்து அணி நிர்வாகத்திடம் கூறினேன். ஆனால் அதனை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த சமயத்தில் எனக்கு நானே போட்டியிட்டுக் கொண்டேன். ஐபிஎல் தொடர் வந்தபோது என்னை நானே முன்னோக்கி வைக்க விரும்பினேன்.
கொல்கத்தா அணிக்காக எந்த திட்டத்தை நாங்கள் வகுத்தாலும் அதை எங்களுடைய சிறந்த திறமையை வைத்து செயல்படுத்த முயற்சிக்கிறோம். எனவே கோப்பையை வெல்வதற்கு தகுந்த இடத்தில் நாங்கள் இருக்கிறோம். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி முடித்ததும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக மாறுவது பேட்ஸ்மேன்களுக்கும் பவுலர்களுக்கும் கடினமாகும். அதை துவங்குவது கடினமாக இருந்தாலும் ஒருமுறை தொடங்கி விட்டால் நீங்கள் மற்ற வீரர்களுடன் ஈடு கொடுத்து விளையாட வேண்டும்" என்று கூறினார்.