அவரை விட எந்த ஐ.பி.எல். அணியின் உரிமையாளரும் சிறந்தவராக இருக்க முடியாது - கம்மின்ஸ் பாராட்டு
|முதல் முறையாக ஷாருக்கானை பார்த்தபோது அவர் யார் என்று தனக்கு தெரியவில்லை என கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்
சிட்னி,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான ஐ.பி.எல்.-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் உள்ளார். முன்னதாக 2014 ஐ.பி.எல். தொடரின்போது கொல்கத்தா அணியில் அறிமுக வீரராக ஐ.பி.எல். பயணத்தை தொடங்கினார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ்.
இந்நிலையில் 2014-ம் ஆண்டு முதல் முறையாக ஷாருக்கானை பார்த்தபோது அவர் யார் என்று தனக்கு தெரியவில்லை என பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு ஐ.பி.எல். அணிக்கு ஷாருக்கான் போன்றவர் உரிமையாளராக இருப்பது சிறந்த விஷயம் என்றும் அவர் பாராட்டியுள்ளார். அதற்கான காரணங்கள் பற்றி சமீபத்திய பேட்டியில் கமின்ஸ் தெரிவித்தது பின்வருமாறு:-
"இப்படி சொல்வது எனக்கு சிரமத்தை கொடுக்கலாம். ஆனால் ஷாருக்கானை முதல் முறையாக பார்த்தபோது அவர் யார் என்ற ஐடியா எனக்கு இல்லை. அந்த சமயத்தில் 18 - 19 வயதில் இருந்த நான் பாலிவுட் படங்களை பார்த்ததில்லை. அந்த சூழ்நிலையில் நேரில் பார்த்தபோது அவர் நட்சத்திரம் என்று என்னிடம் சொன்னார்கள். அவரைச் சுற்றி பாதுகாவலர்கள் இருந்தார்கள். மற்ற இளம் இந்திய வீரர்கள் அவரிடம் பேசுவதற்கு தயங்கினார்கள். அதனால் அவர் சிறப்பானவராக இருப்பார் என்று நான் நினைத்தேன்.
ஒரு அணியின் கேப்டனாக இவரை விட சிறந்த உரிமையாளரை நீங்கள் கேட்க முடியாது. ஏனெனில் அவர் வீரர்களான எங்களை மிகவும் மகிழ்ச்சியுடன் சுந்தரமாக விளையாடுங்கள் என்றே சொல்வார். ஆனால் மற்ற ஐ.பி.எல். அணியின் உரிமையாளர்கள் தங்களுக்கு தாங்களே அழுத்தத்தை போடுவார்கள். ஆனால் ஷாருக்கான் அணி மற்றும் வீரர்களிடமிருந்து அழுத்தத்தை எடுக்க முயற்சிப்பது சிறந்த விஷயமாகும்" என்று கூறினார்.