
image courtesy:AFP
மிடில் ஆர்டரில் எந்த பேட்ஸ்மேனுக்கும் நிலையான இடம் கிடையாது - அக்சர் படேல் பேட்டி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆட உள்ளது.
கொல்கத்தா,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும், அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெறுகின்றன.
இந்த தொடருக்கான இந்திய டி20 அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அணிக்கு அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த டி20 தொடர் குறித்து இந்திய துணை கேப்டன் அக்சர் படேல் சில கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
நாங்கள் 2024-ம் ஆண்டு முதலில் நிலையான தொடக்க ஜோடியை வைத்திருக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டோம். அதன் பின்னர், 3 - 7 வரை பேட்டிங் செய்யக்கூடியவர்கள் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாட உள்ளார்கள். எனக்கு மட்டுமல்ல. இது அனைவருக்கும் பொருந்தும். யாருக்கும் நிலையான இடமில்லை. இவை அனைத்தும் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் அட்ஜஸ்ட் செய்து கொள்வதை பற்றியதாகும்.
எங்கள் டி20 அணி செட்டிலாகி இருக்கிறது. பெரிய அழுத்தம் இல்லை. தலைமைப் பொறுப்பில் இருக்கும் போது நீங்கள் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால், அது போன்ற விஷயங்கள் பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை. ஷமி மீண்டும் வருவது எங்கள் அணிக்கு நேர்மறையான விஷயமாகும். உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கடைசியாக விளையாடிய அவர் தற்போது குணமடைந்து சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பையில் நன்றாக விளையாடினார்.
அவரைப் போன்ற சீனியர் வீரர் மீண்டு வரும் பொழுது அணிக்கு பெரிய உத்வேகம் கிடைக்கும். ஷமி களத்தில் என்ன கொண்டு வருவார், அவரால் புதிய பந்திலும், டெத் ஓவர்களிலும் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்கு தெரியும். களத்தில் அவர் இருப்பதும் புதிய பந்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதும் அணிக்கு மிகப்பெரிய சாதகமாக இருக்கும். கடந்த உலகக் கோப்பையில் விட்ட இடத்திலிருந்து அவர் மீண்டும் இந்திய அணிக்காக தொடர்வார் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.