இந்திய டெஸ்ட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த நிதிஷ் ரெட்டி - வாஷிங்டன் ஜோடி
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இவர்கள் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
மெல்போர்ன்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. 'பாக்சிங் டே' என்று பாரம்பரிய பெயரில் அழைக்கப்படும் இந்த டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டீவ் சுமித் 140 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்கள் அடித்துள்ளது. நிதிஷ் ரெட்டி 105 ரன்களுடனும், சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 116 ரன்கள் பின்தங்கி உள்ளது.
ஒரு கட்டத்தில் இந்திய அணி பாலோ ஆன் ஆகிவிடும் என்ற இக்கட்டான சூழலில் இருந்தது. ஆனால் 8-வது விக்கெட்டுக்கு கை கோர்த்த வாஷிங்டன் சுந்தர் - நிதிஷ் ரெட்டி ஜோடி 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்தியது. சுந்தர் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். நிதிஷ் ரெட்டி சிறப்பாக விளையாடி சதமடித்த நிலையில் களத்தில் உள்ளார்.
மேலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய மண்ணில் 8-வது அல்லது அதற்கும் குறைவான விக்கெட்டுகளில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த 2-வது ஜோடி என்ற மாபெரும் சாதனையை நிதிஷ் ரெட்டி - வாஷிங்டன் படைத்துள்ளனர்.
அந்த பட்டியல்:-
1. சச்சின் - ஹர்பஜன் - 129 ரன்கள்
2. நிதிஷ் ரெட்டி - வாஷிங்டன் சுந்தர் - 127 ரன்கள்
3. அனில் கும்ப்ளே - ஹர்பஜன் - 107 ரன்கள்