"அடுத்த தோனி" - சஞ்சு சாம்சன் குறித்த தனது பழைய டுவீட் பதிவை பகிர்ந்த சசி தரூர்
|சஞ்சு சாம்சன் குறித்த தனது பழைய டுவீட் பதிவை சசி தரூர் பகிர்ந்துள்ளார்.
புதுடெல்லி,
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அடித்த சதம் டி20 கிரிக்கெட்டில் நடப்பாண்டில் (2024) அவரது 3-வது சதமாக பதிவானது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வருடத்தில் 3 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். சஞ்சு சாம்சன் தற்போது அணியின் தொடக்க ஆட்டக்காரராக அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் 'அடுத்த தோனி' என அவரை குறிப்பிட்ட தனது டுவிட்டர் பதிவை நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மீண்டும் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த பதிவில், "கேரள ரஞ்சிக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள திருவனந்தபுரத்தை சேர்ந்த ரோகன் பிரேம் மற்றும் 15 வயதேயான சஞ்சு சாம்சனை (அடுத்த தோனி) கொஞ்சம் பாருங்கள்" என அதில் சசி தரூர் தெரிவித்திருந்தார்.
அந்த டுவீட் பதிவை தற்போது பகிர்ந்துள்ள அவர், "15 ஆண்டுகளுக்குப் பிறகு 'அப்போதே நான் சொன்னேன்' என்று சொல்வது மிகவும் அற்புதமானது" என தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில் சஞ்சு சாம்சன், இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், பி.சி.சி.ஐ. மற்றும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் கேப்டனாக வழிநடத்தும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை டேக் செய்துள்ளார்.