பாகிஸ்தான் டி20 & ஒருநாள் அணிகளுக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு
|பாகிஸ்தான் டி20 & ஒருநாள் அணிகளுக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கராச்சி,
பாகிஸ்தான் டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கான தலைமை பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன் அந்நாட்டு வாரியத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்து டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஜேசன் கில்லெஸ்பி பாகிஸ்தான் வெள்ளைப்பந்து (டி20 மற்றும் ஒருநாள்) அணிகளுக்கான இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இவரது தலைமையில் விளையாடிய பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயனத்தில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. அதே வேளையில் டி20 தொடரில் ஒயிட்வாஷ் ஆகியது.
இந்நிலையில் பாகிஸ்தான் வெள்ளைப்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக அந்நாட்டின் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவித் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது. எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரை இவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜேசன் கில்லெஸ்பி டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக தொடருகிறார்.
முன்னதாக கில்லெஸ்பியை நீக்கி விட்டு ஆகிப் ஜாவித்தை 3 வடிவிலான அணிகளுக்கும் தலைமை பயிற்சியாளராக நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டதாக தகவல் பரவியது. தற்போது அந்த வதந்திகளுக்கு பாகிஸ்தான் வாரியம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.