< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்

தினத்தந்தி
|
9 July 2024 8:07 PM IST

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வந்தது. கோப்பையை வென்ற நிலையில், தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். மேற்கொண்டு பணியில் தொடர அவர் ஆர்வம் காட்டவில்லை.

இதனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாகவே புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ. இறங்கியது. அதில் கவுதம் கம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா உள்ளிட்ட முன்னாள் வீரர்களுடன் பிசிசிஐ பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அதில் கவுதம் கம்பீருக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது.

மேலும் பயிற்சியாளர் பதவிக்கு அவர் விண்ணப்பம் மட்டுமே ஏற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பயிற்சியாளர் பதவிக்கு நடத்தப்பட்ட நேர்காணலில் கம்பீருக்கு போட்டியாக யாரும் எதிர்பாராத விதமாக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் வீரரான டபிள்யூ.வி. ராமனும் கலந்து கொண்டார். இதனால் யார் அடுத்த தலைமை பயிற்சியாராக வருவார்? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்பட்டது. இதனிடையே கம்பீர்தான் அடுத்த தலைமை பயிற்சியாளர் என்ற செய்திகளும் வெளிவந்தன.

இந்நிலையில் அனைவரின் கருத்துகளின் படியே, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்