எனது இதயம் இந்த இளம் பையனை பார்த்து வருந்துகிறது - இந்திய தேர்வுக்குழுவை விமர்சித்த முன்னாள் வீரர்
|இலங்கை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில் சஞ்சு சாம்சன் டி20 அணியில் மட்டும் இடம் பிடித்துள்ளார். ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பிடிக்கவில்லை. அதேபோல் அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்வாட் ஆகியோர் டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் இடம் பிடிக்கவில்லை.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் அந்த அணியில் கேரளாவை சேர்ந்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் மீண்டும் கழற்றி விடப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் சதமடித்த சஞ்சு சாம்சன் இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
அப்படி இந்தியா விளையாடிய கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்த அவருக்கு அடுத்ததாக நடைபெறும் இலங்கைத் தொடரில் வாய்ப்பு கொடுக்காதது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்து வெற்றி பெற வைத்த சஞ்சு சம்சானை கழற்றி விட்டு புதுமுகமான ஷிவம் துபேவை தேர்வு செய்துள்ளது கேலிக்குரியது என முன்னாள் வீரரான டோட்டா கணேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.:-
"ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஷிவம் துபே தேர்வு செய்யப்பட்டுள்ளது கேலிக்குரியது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தனது கடைசி தொடரில் சஞ்சு சாம்சன் சதமடித்தார். ஆனாலும் அவர் ஏன் இப்படி எப்போதும் கழற்றி விடப்படுகிறார்? எனது இதயம் இந்த இளம் பையனை பார்த்து வருந்துகிறது" என்று பதிவிட்டுள்ளார்.