முஷ்பிகுர் ரஹிம் அபார சதம்.. பாகிஸ்தானுக்கு எதிராக முதல் இன்னிங்சில் வங்காளதேசம் முன்னிலை
|வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 191 ரன்கள் குவித்தார்.
ராவல்பிண்டி,
பாகிஸ்தான்- வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 448 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. சாத் ஷகீல், முகமது ரிஸ்வான் சதம் அடித்தனர்.
அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 92 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் அடித்திருந்தது. முஷ்பிகுர் ரஹிம் 55 ரன்களுடனும், லிட்டான் தாஸ் 52 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேசம் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே லிட்டன் தாசின் விக்கெட்டை இழந்தது. பின்னர் ரஹிமுடன் மெஹிதி ஹசன் மிராஸ் கை கோர்த்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியை முன்னிலை பெற உதவினர். மிராஸ் அரைசதம் அடிக்க முஷ்பிகுர் ரஹிம் சதமடித்து அசத்தினார். மிராஸ் 77 ரன்களிலும், அவரை தொடர்ந்து ஹசன் மக்முத் டக் அவுட்டிலும் ஆட்டமிழந்தனர். இதனிடையே வங்காளதேசம் 500 ரன்களை கடந்தது.
இறுதி கட்டத்தில் ரஹிமுக்கு ஷோரிபுல் இஸ்லாம் ஒத்துழைப்பு கொடுத்தார். அபாரமாக விளையாடிய முஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார். அவர் 191 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
முடிவில் வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 167.3 ஓவர்களில் 565 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இது பாகிஸ்தானை விட 117 ரன்கள் அதிகமாகும். பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக நசீம் ஷா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 3 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 5 ரன்களுடன் விளையாடி வருகிறது.