மும்பை டெஸ்ட்; இந்தியாவுக்கு 147 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
|இந்தியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மும்பை,
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து வில் யங் (71 ரன்), டேரில் மிட்செல் (82 ரன்) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 235 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 59.4 ஓவர்களில் 263 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 90 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 2ம் நாள் முடிவில் 43.3 ஓவர்களில் 171 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அஜாஸ் படேல் 7 ரன்களுடன் களத்தில் இருந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 143 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து 174 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக வில் யங் 51 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.