< Back
கிரிக்கெட்
2025 ஐ.பி.எல். போட்டியில் தோனி விளையாடுவாரா..? வெளியான தகவல்

கோப்புப்படம்

கிரிக்கெட்

2025 ஐ.பி.எல். போட்டியில் தோனி விளையாடுவாரா..? வெளியான தகவல்

தினத்தந்தி
|
29 Sept 2024 1:58 AM IST

ஐ.பி.எல். தக்கவைப்பு விதிகள் அறிவிக்கப்பட்டதால் சி.எஸ்.கே.வின் எம்.எஸ். தோனி 'அன்கேப்' வீரராக அறிவிக்கப்படுகிறார்.

புதுடெல்லி,

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம், ஏலத்தில் எவ்வளவு செலவிடலாம் என்பது குறித்து அணி உரிமையாளர்களுடன், ஐ.பி.எல். நிர்வாகம் கடந்த ஜூலை மாதம் விரிவாக விவாதித்தது. அப்போது அணி நிர்வாகிகள் பல்வேறு யோசனைகளை தெரிவித்தனர். அது குறித்து பெங்களூருவில் நேற்று நடந்த ஐ.பி.எல். நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதன் முடிவில் 18-வது ஐ.பி.எல். போட்டிக்கு ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்க வைக்க அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் ஆர்.டி.எம். என்ற சிறப்பு சலுகை மூலம் மேலும் ஒரு வீரரை தக்கவைக்க முடியும். அதாவது தங்கள் அணியில் இருந்து விடுவிக்கப்படும் வீரரை மாற்று அணி ஏலத்தில் அதிகபட்சமாக எடுக்கும்பட்சத்தில் அந்த வீரரை அதே தொகைக்கு ஆர்.டி.எம். -ஐ பயன்படுத்தி தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளலாம். கடந்த ஏலத்துக்கு முன்னதாக ஒரு அணி 4 வீரர்களை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏலத்தில் ஒரு அணி வீரர்களை வாங்குவதற்கு ரூ.120 கோடி வரை செலவிட அனுமதிப்பது என்றும் ஐ.பி.எல். நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.20 கோடி அதிகமாகும்.

தக்கவைக்கும் முதல் 3 வீரர்களுக்கு ரூ. 18 கோடி, ரூ.14 கோடி, ரூ.11 கோடி வீதம் ஊதியம் வழங்க வேண்டும். எஞ்சிய இரு வீரர்களுக்கு ரூ.18 கோடி, ரூ.14 கோடி என ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு அணி 5 வீரர்களை தக்கவைக்கும் போது இவர்களுக்கான ஊதியம் மொத்தம் ரூ.75 கோடி போக மீதமுள்ள ரூ.45 கோடியை வைத்து தான் எஞ்சிய வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும்.

தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் விதிமுறை (இம்பேக்ட் வீரர் விதி) கடந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் அறிமுகம் ஆனது. இன்னிங்சின் பாதியில் ஒரு வீரரை எடுத்து விட்டு அவருக்கு பதிலாக மாற்று வீரரை களம் இறக்கும் இந்த விதிமுறைக்கு எதிர்ப்பும் கிளம்பியது. ஆனாலும் அந்த விதிமுறையை அடுத்த ஐ.பி.எல்.-லும் தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே, அடுத்த ஐ.பி.எல். போட்டியில் வீரர்களுக்கு போட்டி கட்டண முறை புதிதாக அறிமுகப்படுத்தப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார்.

இந்நிலையில் அன்கேப்ட் பிளேயர் குறித்த விதிமுறை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த விதிமுறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியை சேர்க்கப்படாத வீரராக வைத்திருக்க வாய்ப்பு அளிக்கிறது. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று 5 ஆண்டுகள் ஆன வீரர்கள், அறிமுக வீரர்களாக கருதும் வகையில் விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தோனியை சி.எஸ்.கே. அணியால் அன்-கேப்ட் வீரராக தக்க வைக்க முடியும்

நியூசிலாந்துக்கு எதிரான 2019 உலகக் கோப்பை போட்டியில் கடைசியாக தேசிய அணிக்காக விளையாடிய தோனி, தற்போது ஐ.பி.எல். 2025 க்கு அன்கேப்ட் செய்யப்படாத வீரராக வகைப்படுத்தப்படுவார்.

இந்த விதிமுறை குறித்த சி.எஸ்.கே.வின் கோரிக்கை ஏற்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கும்நிலையில், தோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

மேலும் செய்திகள்