டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்; நாதன் லயனை பின்னுக்கு தள்ளிய ரவிச்சந்திரன் அஸ்வின்
|இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது.
புனே,
இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியை சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் திணறடித்தனர். குறிப்பாக அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணியின் மொத்த விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
இவர்களின் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும்,ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் சுந்தர் 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாளில் 16-1 ரன்களுடன் விளையாடி வருகிறது. ஜெயஸ்வால் 6 ரன்களுடனும், கில் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. முன்னதாக அஸ்வின் இந்த போட்டியில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது விக்கெட் எண்ணிக்கை 531ஆக உயர்ந்தது.
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் நாதன் லயனை (530 விக்கெட்) பின்னுக்கு தள்ளி அஸ்வின் 7வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் இலங்கையின் முத்தையா முரளிதரன் (800 விக்கெட்) உள்ளார்.