பணம் வெல்லும் கிரிக்கெட் தோற்கும் - பாக். முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து
|டி20 லீக் தொடர்கள் சர்வதேச கிரிக்கெட்டை அழிக்கும் காலம் தொடங்கியுள்ளதாக பாசித் அலி பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.
லாகூர்,
நவீன கிரிக்கெட் உலகில் பெரும்பாலான வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதை விட ஐ.பி.எல். போன்ற டி20 லீக் தொடர்களில் விளையாட முன்னுரிமை கொடுக்கின்றனர். இது போக அமெரிக்கா, அமீரகம், கனடா போன்ற உறுப்பு நாடுகளிலும் புதிய டி20 தொடர்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதனால் டி20 லீக் தொடர்களில் விளையாடுவதற்காக ஜேசன் ராய், ட்ரெண்ட் போல்ட், கேன் வில்லியம்சன் போன்ற நட்சத்திர வீரர்கள் தங்களது தேசிய அணியின் மத்திய ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
அந்த வரிசையில் கான்வே, லாக்கி பெர்குசன், பின் ஆலன் ஆகிய 3 முக்கிய வீரர்கள் நியூசிலாந்து அணியின் மத்திய சர்வதேச ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். இது நியூசிலாந்து அணியின் வீழ்ச்சியாகவே கருதப்படுகிறது.
இந்நிலையில் டி20 லீக் தொடர்கள் சர்வதேச கிரிக்கெட்டை அழிக்கும் காலம் தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்தியா மட்டும் தங்களுடைய வீரர்களை வெளிநாட்டில் விளையாட அனுமதிப்பதில்லை. எனவே அதிலிருந்து இந்தியா தப்பிப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
"இலங்கைத் தொடரில் விளையாட மாட்டேன் என்று கான்வே தெரிவித்துள்ளார். இது நியூசிலாந்து மட்டும் தனியாக சந்திக்கும் பிரச்சினை கிடையாது. வருங்காலங்களில் இதே நிலையை மற்ற அணிகளும் சந்திக்கலாம். பாகிஸ்தான் வீரர்களும் இதை செய்யலாம். ஏனெனில் டி20 லீக் தொடர்களில் நிறைய பணம் கிடைக்கிறது. அதனால் அதன் மீது மோகம் உள்ளது. இந்த விஷயத்தில் இந்தியா மட்டும் அதிர்ஷ்டமிக்கவர்கள்.
ஏனெனில் ஐ.பி.எல். தவிர்த்து அவர்கள் வேறு எங்கேயும் விளையாடுவதில்லை. இந்த டி20 தொடர்கள் நிற்கப் போவதில்லை. அது சர்வதேச கிரிக்கெட்டை குறிப்பாக டெஸ்ட் போட்டிகளை அழிக்கும். நீண்ட நேரம் நின்று விளையாடும் திடமான பேட்ஸ்மேன்களுக்கு அது மெதுவான விஷம் போன்றது. எனவே இந்தியாவை தவிர்த்து டி20 கிரிக்கெட்டால் பல நாடுகள் பாதிக்கப்படலாம். பணம் வெல்லும் கிரிக்கெட் தோற்கும்" என்று கூறினார்.