ரஞ்சி கோப்பை தொடரில் களமிறங்கும் முகமது ஷமி...? வெளியான தகவல்
|காயத்திலிருந்து குணமடைந்துள்ள முகமது ஷமி தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
மும்பை,
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் இந்திய அணிக்காக கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 64 டெஸ்ட் போட்டிகள், 101 ஒருநாள் போட்டிகள் மற்றும் 23 டி20 போட்டிகள் என மூன்று வகையான அணியிலும் இடம் பிடித்து விளையாடி உள்ளார். இவர் உலகக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதன் காரணமாக அதன் பின் எந்த கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை.
இருப்பினும் தற்போது குணமடைந்துள்ள ஷமி பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளார். அதனால் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் வங்காளதேச டெஸ்ட் தொடரில்தான் மீண்டும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு முன்னர் ரஞ்சி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக முகமது ஷமி ஒரிரு போட்டிகளில் விளையாட உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.