ஜிம்பாப்வேவை வீழ்த்தி சொந்த மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவுசெய்து அசத்திய அயர்லாந்து
|சொந்த மண்ணில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி முதல் டெஸ்ட் வெற்றியை அயர்லாந்து அணி பதிவுசெய்தது.
பெல்பாஸ்ட்,
அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி 210 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக பிரின்ஸ் மஸ்வாரே 74 ரன்கள் அடித்தார். அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக பாரி மெக்கார்த்தி மற்றும் ஆண்டி மெக்பிரைன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து 250 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஆன மூர் 79 ரன்கள் அடிக்க, ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி மற்றும் தனகா சிவாங்கா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 40 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே 197 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் அயர்லாந்து வெற்றி பெற 158 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது ஜிம்பாப்வே. அந்த அணியில் அதிகபட்சமாக டியான் மியர்ஸ் 57 ரன்கள் அடித்தார். அயர்லாந்து தரப்பில் ஆண்டி மெக்பிரைன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து 3-வது நாள் முடிவில் 33 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. அதில் அயர்லாந்து அணி வீரர்களான லோர்கன் டக்கர், ஆண்டி மெக்பிரின் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரை சதமடித்தனர். 6வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்த நிலையில் டக்கர் 56 ரன்னில் அவுட்டானார். இறுதியில், அயர்லாந்து அணி 36.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. இதன்படி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது. ஆண்டி மெக்பிரின் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் அயர்லாந்து அணி சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. ஆட்ட நாயகன் விருது ஆண்டி மெக்பிரினுக்கு வழங்கப்பட்டது.