< Back
கிரிக்கெட்
பந்துவீச்சில் வேகத்தை காட்டிய மார்க்வுட்...எனக்கு மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள் என கூறிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்

Image Courtesy: AFP 

கிரிக்கெட்

பந்துவீச்சில் வேகத்தை காட்டிய மார்க்வுட்...எனக்கு மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள் என கூறிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்

தினத்தந்தி
|
20 July 2024 12:11 PM IST

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்று வருகிறது.

நாட்டிங்ஹாம்,

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக போப் 121 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 2வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது நாள் முடிவில் 84 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கவெம் ஹாட்ஜ் சதம் அடித்து அசத்தினார். அவர் 120 ரன்கள் அடித்த நிலையில் அவுட் ஆனார். ஜேசன் ஹோல்டர் 23 ரன்னுடனும், ஜோசுவா டா சில்வா 32 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் இன்னும் 65 ரன்கள் பின்னிலையில் உள்ளது. 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட் பந்துவீச்சில் மிரட்டினார். முதல் ஓவரில் சராசரியாக மணிக்கு 92 மைல் வேகத்தில் 6 பந்துகளையும் வீசிய மார்க் வுட், அதிகபட்சமாக மணிக்கு 157 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் திகைத்துப் போனார்கள்.

இந்நிலையில் நேற்றைய ஆட்டம் முடிந்த பின்னர் சதம் அடித்து அசத்திய கவெம் ஹாட்ஜ் பேட்டி அளித்தார். அப்போது அவர் மார்க் வுட் மிகவும் வேகமாக பந்து வீசிகொண்டிருந்த போது, நான் அவரிடம் நகைச்சுவையாக எனக்கு ஒரு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கூறினேன் என்றார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

மார்க் வுட் பந்துவீச்சு மிருகத்தனமானது. 90 மைல் வேகத்தில் ஒவ்வொரு பந்தையும் நாம் தினமும் எதிர்கொள்ள போவதில்லை. அவர் ஒவ்வொரு பந்தையும் அவ்வளவு வேகமாக வீசிக் கொண்டிருந்தார். அப்பொழுது நான் அவரிடம் நகைச்சுவையாக எனக்கு ஒரு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கூறினேன். ஆனால் அந்தப் போட்டி நன்றாக இருந்தது. இந்தச் சதம் மிகவும் திருப்திகரமாக இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் வடிவம் மிகவும் கடினமானது என்று எங்களுக்கு தெரியும். இது சவால் ஆனது. மேலும் மனதளவில் சோர்வடைய வைக்கக் கூடியது. மார்க் வுட் போன்றவர்களை எதிர்கொள்வது சவாலானது.

ஆனால் அதை எதிர்த்து சிறப்பாக விளையாடிய முடிப்பது திருப்தியை கொடுக்கிறது. சதம் அடித்த உணர்வு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அப்பொழுது 97 ரன்களில் இருந்தேன் என்று நினைக்கிறேன். அப்போது எனக்கு வீசப்பட்ட பந்து ஒரு இன் ஸ்விங்கராக வந்தது. அந்தப் பந்தை அடித்தபோது என்ன நடந்தது என்று புரியவில்லை. பிறகு நானே என்னை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். அது அற்புதமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்