< Back
கிரிக்கெட்
சச்சினை பாருங்க.. - விராட் கோலிக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அறிவுரை

கோப்புப்படம்

கிரிக்கெட்

"சச்சினை பாருங்க.." - விராட் கோலிக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அறிவுரை

தினத்தந்தி
|
17 Dec 2024 12:34 AM IST

விராட் கோலி ஆப்-ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அடித்து விக்கெட்டுகளை இழப்பது தொடர்கதையாகி வருகிறது.

பிரிஸ்பேன்,

பார்டர் கவாஸ்கர் கோப்பை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 2 போட்டிகளின் முடிவில் 1 - 1 என்ற கணக்கில் சமனில் இருக்கிறது

இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. முதல் நாளில் மழையால் 13.2 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டன. 2-வது நாளில் ஆட்டம் முழுமையாக நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட் (152 ரன்), ஸ்டீவன் சுமித் (101 ரன்) ஆகியோரது அபார சதத்தால் 2-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 405 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (45 ரன்), மிட்செல் ஸ்டார்க் (7 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று அவ்வப்போது பெய்த மழையால் 8 முறை ஆட்டத்தை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா எஞ்சிய 3 விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சில் 117.1 ஓவர்களில் 445 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அலெக்ஸ் கேரி 70 ரன்களில் (88 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி விக்கெட்டாக கேட்ச் ஆனார். இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும், ஆகாஷ் தீப், நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வாலும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். முதல் ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜெய்ஸ்வால், அடுத்த பந்திலும் பவுண்டரி அடிக்க முயன்று தனது விக்கெட்டை பறிகொடுத்தார். சிறிது நேரத்தில் சுப்மன் கில்லும் ஸ்லிப்பில் கேட்ச்சாகி ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

ஒரு முனையில் கே.எல்.ராகு. தனது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தது. ரிஷப் பண்ட்டும் (9 ரன்கள்) தாக்குப்படிக்கவில்லை. ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சால் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறியது. அடிக்கடி மழை குறுக்கிட்டதால் இன்றைய நாள் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மழை பாதிப்பு மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக இன்றைய நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.

முடிவில் இந்திய அணி 17 ஓவர்களை எதிர்கொண்டு 4 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்களை எடுத்தது. கே.எல்.ராகுல் 33 ரன்களுடனும், கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இந்திய அணி, ஆஸ்திரேலியாவை விட 394 ரன்கள் பின்தங்கி உள்ளது. பாலோ ஆன் ஆவதை தவிர்க்கவே இந்திய அணிக்கு இன்னும் 194 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது. இன்னும் 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், இந்தியா அணியின் விக்கெட்டை விரைவில் கைப்பற்றி சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள ஆஸ்திரேலியா முயற்சிக்கும்.

அதே சமயம், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளதால், போட்டியை டிரா நோக்கி கொண்டு செல்ல இந்திய அணி முயற்சிக்கும். இதனால் இன்று நடைபெறும் 4-வது நாள் ஆட்டத்தில் விறுவிறுப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் விராட் கோலி கவர் டிரைவ் விளையாடும்போது நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "விராட் கோலியை ஏற்கனவே விவாதித்துள்ளோம். இந்தத் தொடரில் 5 இன்னிங்சில் அவர் 4 முறை இதே போல அவுட்டாகியுள்ளார். அது 2014ம் ஆண்டு இங்கிலாந்தில் அவர் தடுமாறியதை எனக்கு நினைவூட்டுகிறது. அந்த சமயத்தில் கூட விராட் கோலி புதியவராக இருந்ததால் ஆண்டர்சனை எதிர்கொள்வது சிரமமாக இருந்திருக்கும். ஆனால் இப்போதும் அவர் அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் பந்தை துரத்தி சென்று அவுட்டாகிறார். அதனாலேயே இன்று இந்தியா இந்த நிலையில் இருக்கிறது. அவர் நன்றாக விளையாடியிருந்தால் இந்தியா இன்னும் நல்ல நிலையில் இருந்திருக்கும்.

இப்போதாவது விராட் கோலி தனது ஹீரோ சச்சின் தெண்டுல்கர் 2004-ம் ஆண்டு சிட்னியில் நடந்த டெஸ்டில் 241 ரன்கள் குவித்த இன்னிங்சை பார்க்க வேண்டும். அதில் தெண்டுல்கர் மிகவும் பொறுமையாகவும், ஆப்-சைடு பந்துகளை தவிர்த்து விளையாடிய விதமும் அருமையாக இருக்கும். முந்தைய போட்டிகளில் ஆப்ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்துகளில் கவர்டிரைவ் ஷாட் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்ததால் இந்த போட்டியில் அத்தகைய ஷாட்டை தெண்டுல்கர் அறவே தவிர்த்திருப்பார். இதே போல் கோலியும் விளையாட வேண்டும்

அது அடுத்த 2 போட்டிகளில் அவருக்கு உதவலாம். டெஸ்ட் பேட்டிங் என்பது ரன்கள் அடிப்பதை பற்றியது மட்டும் கிடையாது. களத்தில் நின்று விளையாடுவதாகும். அதை செய்தாலே ரன்கள் தாமாக வரும். இங்கிருந்து மற்ற வீரர்களாவது தவறிலிருந்து கற்றுக்கொண்டு 246 ரன்கள் எடுத்து பாலோ ஆனை தவிர்க்க உதவு வேண்டும்" என்று சுனில் கவாஸ்கர் கூறினார்.

மேலும் செய்திகள்