என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் - ஐ.பி.எல். ஏலம் குறித்து பட்லர்
|பட்லர் தற்போது அபுதாபியில் நடைபெற்று வரும் டி10 லீக்கில் விளையாடி வருகிறார்.
அபுதாபி,
2025 ஐ.பி.எல். தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலம் நாளை, நாளை மறுநாள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் கடந்த அக்டோபர் 31-ம் தேதி அன்று தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தன.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துள்ளது. பஞ்சாப் 2, பெங்களூரு 3, டெல்லி 4, ராஜஸ்தான் ராயல்ஸ் 6 வீரர்களை தக்க வைத்துள்ளது.
ஆச்சரியம் அளிக்கும் வகையில் ரிஷப் பண்ட் (டெல்லி), லோகேஷ் ராகுல் (லக்னோ), ஸ்ரேயஸ் ஐயர் (கொல்கத்தா), அர்ஷ்தீப் சிங் (பஞ்சாப்) போன்ற முன்னணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அதேபோல் ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜாஸ் பட்லரும் ஏலத்திற்கு வருகிறார்.
பட்லர் தற்போது அபுதாபியில் நடைபெற்று வரும் டி10 லீக்கில் விளையாடி வருகிறார். இந்நிலையில், ஐ.பி.எல். ஏலம் குறித்து பட்லர் சில கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அபு தாபியில் டி10 கிரிக்கெட் லீக்கில் விளையாடுவதை மகிழ்ச்சியாக அனுபவித்து வருகிறேன். ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலத்தில் பதிவு செய்துள்ளேன். ஐ.பி.எல் மெகா ஏலத்தில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். டி10 கிரிக்கெட் லீக்கில் இதற்கு முன் ஒருபோதும் நான் விளையாடியது கிடையாது.
ஆனால், இன்று மைதானத்துக்குள் நுழைந்தது முதல் மிகவும் உற்சாகமாக இருந்தது. டி10 கிரிக்கெட்டில் பல சிறந்த வீரர்கள் விளையாடுகிறார்கள். நிக்கோலஸ் பூரன் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் போன்ற வீரர்களுடன் டிரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்துகொள்வது சிறப்பாக உள்ளது. டி10 கிரிக்கெட் மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.