இந்தியாவை வீழ்த்துவோம் - வங்காளதேச வீரர் நம்பிக்கை
|இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது.
டாக்கா,
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
முன்னதாக இந்த தொடரில் இந்திய அணியை தோற்கடிப்போம் என்று வங்காளதேச அணியினர் தொடர்ச்சியாக நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் 2 - 0 (2 போட்டிகள்) என்ற கணக்கில் வங்காளதேசம் வீழ்த்தியது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக வென்று வங்காளதேசம் வரலாறு படைத்தது.
இந்நிலையில் இந்தியா போன்ற வலுவான அணியை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்தால் உலகில் அனைவரும் தங்களை திரும்பிப் பார்ப்பார்கள் என்று வங்காளதேச வீரர் சோரிபுல் இஸ்லாம் கூறியுள்ளார். இருப்பினும் பாகிஸ்தானை போல இந்தியாவை எளிதாக வீழ்த்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் சரியான திட்டங்களுடன் கடினமாக பயிற்சிகளை எடுத்து வரும் தாங்கள் இந்தியாவை வீழ்த்துவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா மிகவும் அனுபவமிக்க அணியாகும். மிகப்பெரிய அணியான இந்தியாவுக்கு எதிராக நாங்கள் நன்றாக விளையாடினால் எங்களை மொத்த உலகமும் திரும்பிப் பார்க்கும் என்று கருதுகிறேன். எனவே இந்தியாவில் நாங்கள் நன்றாக செயல்பட்டால் அது எங்களை மகிழ்ச்சியடைய வைக்கும். அதற்காக நாங்கள் கடினமாக வேலை செய்து வருகிறோம்.
எனவே வெற்றி முடிவுகளும் எங்களுக்கு சாதகமாக வரும் என்று நம்புகிறோம். பாகிஸ்தானில் எங்களுக்கு ஓரளவு நல்ல தொடர் அமைந்தது. எனவே இந்தியாவிலும் நாங்கள் முதல் போட்டியை வெல்ல முயற்சிப்போம். அனைவரும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம். எனவே எங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த முயற்சிப்போம்" என்று கூறினார்.