கடைசி டி20: நியூசிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற இலங்கை
|இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
நெல்சன்,
இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குசல் பெரேரா 101 ரன்கள் அடித்தார்.
இதனையடுத்து 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ரச்சின் ரவீந்திரா - டிம் ராபின்சன் முதல் விக்கெட்டுக்கு 7.2 ஓவர்களில் 81 ரன்கள் அடித்து வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். டிம் ராபின்சன் 37 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து களமிறங்கிய மார்க் சாப்மேன் (9 ரன்கள்), பிலிப்ஸ் (6 ரன்கள்) சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
பின்னர் ரச்சின் ரவீந்திராவுடன் கை கோர்த்து டேரில் மிட்செலும் அதிரடியாக விளையாட நியூசிலாந்து இலக்கை நோக்கி வெகுவாக முன்னேறியது. ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் வெற்றி இலங்கை பக்கம் திரும்பியது. ரச்சின் ரவீந்திரா 69 ரன்களிலும், டேரில் மிட்செல் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதி கட்டத்தில் சக்காரி பவுல்க்ஸ் 21 ரன்கள் போராடியும் பலனில்லை.
நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை ஆறுதல் வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் அசலன்கா 3 விக்கெட்டுகளும், வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. குசல் பெரேரா ஆட்ட நாயகனாகவும், நியூசிலாந்து வீரர் ஜேக்கப் டபி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.