இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற கோலி இதனை மாற்ற வேண்டும் - முகமது கைப்
|டெஸ்ட் போட்டிகளில் சமீப காலமாக விராட் கோலி தடுமாறி வருகிறார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளிலேயே நியூசிலாந்து வெற்றி பெற்று முதல் முறையா இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்துவிட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆறுதல் வெற்றி பெறும் நோக்கில் இந்தியா விளையாடி வருகிறது.
முன்னதாக இந்த தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலியின் பார்ம் இந்திய அணிக்கு கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஏனெனில் 2-வது போட்டியில் புல்டாஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டான அவர், 3-வது போட்டியில் ஒரு ரன்னிற்கு ஆசைப்பட்டு ரிஸ்க் எடுத்து ரன் அவுட் ஆனார்.
இந்நிலையில் விராட் கோலி பேட்டிங்கில் தொடர்ந்து தவறுகளை செய்து கொண்டு இருக்கிறார். இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் அவர் இதை மாற்றிக் கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர் முகமது கைப் கூறி இருக்கிறார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "விராட் கோலி இந்த தொடரில் புல்டாஸ் பந்தில் போல்டானார். இப்போது தவறான முடிவை எடுத்து ரன் அவுட் ஆகி இருக்கிறார். இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் விராட் கோலி இதை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்." என பதிவிட்டுள்ளார்.