< Back
கிரிக்கெட்
கே.எல். ராகுல் அவுட் சர்ச்சை: முன்னாள் வீரர்கள் விமர்சனம்
கிரிக்கெட்

கே.எல். ராகுல் அவுட் சர்ச்சை: முன்னாள் வீரர்கள் விமர்சனம்

தினத்தந்தி
|
22 Nov 2024 11:45 AM IST

கே.எல். ராகுலுக்கு அவுட் வழங்கப்பட்டது குறித்து முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்து வருகின்றன.

பெர்த்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 93 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் தொடக்க ஆட்டக்காரர் ஆன கே.எல். ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவர் 26 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

முதலில் கள நடுவர் அவுட் வழங்கவில்லை. நடுவரின் முடிவை எதிர்த்து ஆஸ்திரேலிய அணியினர் அப்பீல் செய்தனர். ரீப்ளேவில் ராகுலின் பேட்டில் பந்து பட்டதற்கான துல்லியமான அறிகுறி ஏதுமில்லை. மேலும் பேட் முதலில் கால் பேடில்படுவதுபோல் தெரிந்தது. ஆனால் பந்து பேட்டை நெருங்கும்போது அல்ட்ரா எட்ஜில் சிறிய அதிர்வு காணப்பட்டதை வைத்து அவுட் என கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் பந்து பேட்டில் பட்டதா அல்லது பேட் முதலில் பேடில் பட்டதா என்பதை கண்டறிய ஹாட் ஸ்பாட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை.

இருப்பினும் 3-வது நடுவர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் அவுட் என தீர்ப்பளித்தார். இதனால் ராகுல் அதிருப்தியுடன் வெளியேறினார். நடுவரின் இந்த முடிவு பல முன்னாள் வீரர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் இந்திய முன்னாள் வீரரான முரளி கார்த்திக் தனது எக்ஸ் பக்கத்தில், "இன்னும் இதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். டெஸ்ட் போட்டி தொடங்கும்போது அவர்களிடம் மில்லியன் கேமராக்கள் இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் கே.எல். ராகுல் ஆட்டமிழந்தபோது அதை ஆராய தகுந்த கேமரா சரியாக கிடைக்கவில்லை என கூறப்பட்டது ஆச்சரியமாக இருந்தது" என்று விமர்சித்துள்ளார்.

மற்றொரு இந்திய முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா, "அனைத்து கோணங்களையும் ஆராயாமல் 3-வது நடுவர் எப்படி முடிவெடுக்கிறார். இது தவறு" என்று பதிவிட்டுள்ளார்.

பிரபல வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே, "கள நடுவரின் முடிவினை எதிர்த்து அப்பீல் செய்யும்போது 3-வது நடுவர் அவசரப்பட்டு முடிவெடுக்க கூடாது. மறுபரிசீலனை செய்ய பல கோணங்கள் இருக்கும்போது அவசரப்பட வேண்டியதில்லை" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்