ஐ.பி.எல்.: கொல்கத்தா அணியிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்..? - அணி நிர்வாகம் விளக்கம்
|அடுத்த ஐ.பி.எல். தொடருக்கான கொல்கத்தா அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தக்க வைக்கப்படவில்லை.
கொல்கத்தா,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மெகா ஏலம் இந்த மாதம் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (அக்டோபர் 31-ந் தேதி) மாலை 5 மணிக்குள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
இதன்படி ஐ.பி.எல்.போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் தக்க வைக்கும் வீரர்களின் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இதில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரிங்கு சிங் (ரூ.13 கோடி), வருண் சக்ரவர்த்தி (ரூ.12 கோடி), சுனில் நரைன் (ரூ.12 கோடி), ஆந்த்ரே ரஸ்செல் (ரூ.12 கோடி), ஹர்ஷித் ராணா (ரூ.4 கோடி), ரமன்தீப் சிங் (ரூ.4 கோடி) ஆகிய 6 வீரர்களை தக்க வைத்துள்ளது. ஆச்சரியம் அளிக்கும் வகையில் அந்த அணிக்கு கடந்த வருடம் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்துள்ளது.
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் இது பற்றி விளக்கம் அளித்து இருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயரை தாங்கள் நீக்கவில்லை என்றும், அவர் தனது சந்தை மதிப்பை அறிய ஏலத்தில் பங்கேற்க விரும்பினார் என்றும் கூறி இருக்கிறார்.
இது பற்றி வெங்கி மைசூர் பேசுகையில், "எங்கள் அணியின் தக்க வைப்பு வீரர்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் இடத்தில் இருந்தார். ஆனால், இந்த முடிவுகள் ஒரு வழிப்பாதை அல்ல. ஒரு அணி மட்டுமே எந்தெந்த வீரர்களை தக்க வைக்கலாம் என்று முடிவை எடுக்க முடியாது. அந்த வீரர் அணியில் நீடிக்க விரும்புகிறாரா? என்பதையும் பார்க்க வேண்டும்.
எங்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் இடத்தில் இருந்தார். அவர்தான் எங்கள் அணியின் கேப்டனாகவும் இருந்தார். அவர் கேப்டனாக இருக்க வேண்டும் என்பதால்தான் அவரை நாங்கள் 2022ல் வாங்கினோம். ஆனால், சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. ஒரு வீரர் தனது சந்தை மதிப்பை அறிய விரும்பினால் ஏலத்தில் பங்கேற்பது சரியான விஷயமாக இருக்கும். அதை அவர் செய்வதும் சரியான விஷயம்தான். எங்கள் வீரர்கள் அவர்களுக்கு வேண்டிய முடிவை எடுப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்று கூறினார்.