விராட் கோலி குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது - இந்திய முன்னாள் வீரர்
|நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.
மும்பை,
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது. இதன் மூலம் சொந்த மண்ணில் 24 வருடங்களுக்கு பிறகு முதன் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. இந்த தோல்விக்கு நியூசிலாந்தின் சுழற்பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமாக அமைந்தது.
பெங்களூருவில் நடைபெற்ற 2-வது போட்டியில் சான்ட்னெர் சுழலில் சிக்கிய இந்தியா, மும்பையில் நடைபெற்ற கடைசி போட்டியில் அஜாஸ் சுழலில் மொத்தமாக அடங்கியது. இதுவே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. பொறுப்புடன் விளையாட வேண்டிய முன்னணி வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த தொடர் முழுவதுமே சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்விக்கு முக்கிய காரணமாய் அமைந்தனர்.
குறிப்பாக விராட் கோலி இந்த தொடரில் ஆட்டமிழந்த விதங்கள் மிகவும் மோசமாக அமைந்துள்ளன. 3 போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு அரைசதம் உட்பட 93 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறுகையில், "விராட் கோலியை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவில் இருந்து மீண்டும் சிறப்பாக விளையாடத் தொடங்குவார் என்று நம்புகிறேன். ஏனெனில் ஆஸ்திரேலிய மண்ணில் எப்போதும் நன்றாக ஆடுவார். அங்கு ரன் குவிப்பது அவரது பலங்களில் ஒன்று. அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து இப்போதே கருத்து சொல்வது உகந்ததாக இருக்காது. அதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது' என்றார்.