ஜூனியர் ஆசிய கோப்பை: ஜப்பான் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா
|இந்தியா தரப்பில் அதிகபட்சமாக முகமது அமான் 122 ரன்கள் குவித்தார்.
ஷார்ஜா,
8 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் ஜப்பான் அணியுடன் விளையாடி வருகிறது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜப்பான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன வைபவ் சூர்யவன்ஷி - ஆயுஷ் மத்ரே ஒரளவு நல்ல தொடக்க கொடுத்தனர். சூர்யவன்ஷி 23 ரன்களிலும், ஆயுஷ் மத்ரே 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஆண்ட்ரே சித்தார்த் தனது பங்குக்கு 35 ரன்கள் அடித்தார்.
மிடில் ஓவர்களில் ஜோடி சேர்ந்த முகமது அமான் - கார்த்திகேயா ஜோடி சிறப்பாக விளையாடி அணிக்கு வலு சேர்த்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். கார்த்திகேயா 57 ரன்களில் ஆட்டமிழக்க அமான் நிலைத்து விளையாடி சதம் அடித்து அசத்தினார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்துள்ளது. முகமது அமான் 122 ரன்களுடனும், ஹர்திக் ராஜ் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஜப்பான் தரப்பில் அதிகபட்சமாக கீபர் லேக் மற்றும் ஹ்யூகோ கெல்லி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 340 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஜப்பான் பேட்டிங் செய்து வருகிறது.