ஜூனியர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி; இந்தியாவுக்கு 199 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்
|இந்தியா தரப்பில் யுதாஜித் குஹா, சேத்தன் சர்மா, ஹர்திக் ராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
துபாய்,
8 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் பாகிஸ்தான், இந்தியா (ஏ பிரிவு) இலங்கை , வங்காளதேசம் (பி பிரிவு) ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
இதையடுத்து நடந்த அரையிறுதியில் இந்திய அணி இலங்கையையும், வங்காளதேச அணி பாகிஸ்தானையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் இந்தியா - வங்காளதேசம் இடையிலான இறுதிப்போட்டி துபாய் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து வங்காளதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜவாத் அப்ரார் மற்றும் கலாம் சித்திக் ஆலன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் கலாம் சித்திக் ஆலன் 1 ரன்னிலும், ஜவாத் அப்ரார் 20 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய வங்காளதேச அணியினர், இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதில் எம்டி அஜீசுல் ஹக்கீம் தமீம் 16 ரன், முகமது ஷிஹாப் ஜேம்ஸ் 40 ரன், எம்டி ரிசான் ஹோசன் 47 ரன், தேபாசிஷ் சர்கார் தேபா 1 ரன், எம்டி பரித் ஹசன் பைசல் 39 ரன்,எம்டி சாமியுன் பாசிர் ரதுல் 4 ரன், அல் பஹத் 1 ரன், இக்பால் ஹொசைன் எமன் 1 ரன் எடுத்து அவுட் ஆகினர். இறுதியில் வங்காளதேசம் 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 198 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் யுதாஜித் குஹா, சேத்தன் சர்மா, ஹர்திக் ராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 199 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆட உள்ளது.