ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா? - யு.ஏ.இ அணியுடன் இன்று மோதல்
|இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஜப்பான் அணிகள் மோத உள்ளன.
ஷார்ஜா,
8 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இதில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள 8 முறை சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியும், 2வது ஆட்டத்தில் ஜப்பானுக்கு எதிராக வெற்றியும் கண்டுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டங்கள் இன்று நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் - ஜப்பான், இந்தியா - யு.ஏ.இ அணிகள் மோத உள்ளன. இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெறும். தோல்வி கண்டால் லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறும். பாகிஸ்தான் அணி 2 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளதால் அந்த அணி ஏறக்குறையை அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது.