ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; வங்காளதேசம் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
|பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
துபாய்,
8 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் பாகிஸ்தான், இந்தியா (ஏ பிரிவு), இலங்கை , வங்காளதேசம் (பி பிரிவு) ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில், இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. ஒரு அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை - இந்தியா அணிகளும், மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகளும் மோதின. இதில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், வங்காளதேச அணியினரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 116 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக பர்ஹான் யூசுப் 32 ரன் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் இக்பால் ஹொசைன் எமன் 4 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 117 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேசம் 22.1 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 120 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வங்காளதேசம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வரும் 8ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் வங்காளதேசம் - இந்தியா அணிகள் துபாயில் மோத உள்ளன.