< Back
கிரிக்கெட்
இது சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் - இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின்
கிரிக்கெட்

இது சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் - இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின்

தினத்தந்தி
|
5 Nov 2024 11:29 AM IST

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

மும்பை,

டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன்படி நடைபெற்ற இந்த தொடரில் நியூசிலாந்து பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், புனேயில் நடந்த 2-வது டெஸ்டில் 113 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது.

இதனையடுத்து மும்பையில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் 147 ரன் இலக்கை கூட விரட்டி பிடிக்க முடியாமல் இந்திய அணி தோல்வி கண்டது. இதனால் நியூசிலாந்து தொடரை முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது. இதனால் எளிதில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணிக்கு தற்போது சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "0 - 3 என சொந்த மண்ணில் தோல்வி அடைவது ஜீரணிக்க முடியாத விஷயம். தோல்வி குறித்து நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது. இது தயாராவதில் தவறு நடந்ததாலா? சுமாரான ஷாட் செலக்சன் காரணமாகவா? சுமாரான பயிற்சி காரணமாகவா? என்று சோதிக்க வேண்டும். 3-வது போட்டியின் முதல் இன்னிங்சில் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிஷப் பண்ட் 2 இன்னிங்சிலும் அசத்தினார். தொடர் முழுவதும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்திற்கு முழு பெருமை. இந்தியாவில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெறுவது எவ்வளவு சிறந்த முடிவு" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்