< Back
கிரிக்கெட்
இது வேடிக்கையாக இருக்கிறது - ஐ.சி.சி. மீது டிராவிட் அதிருப்தி
கிரிக்கெட்

இது வேடிக்கையாக இருக்கிறது - ஐ.சி.சி. மீது டிராவிட் அதிருப்தி

தினத்தந்தி
|
5 Jun 2024 3:12 PM IST

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.

நியூயார்க்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 1-ம் தேதி தொடங்கி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் அயர்லாந்துடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.

முன்னதாக கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த உலகக்கோப்பையின் கணிசமான போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறுகிறது. பொதுவாக அமெரிக்காவில் பேஸ்பால் போன்ற மற்ற விளையாட்டுகள் தான் பிரபலமாகும். அதனால் வளர்ந்த நாடாக இருந்தாலும் அங்கு போதுமான அளவுக்கு சர்வதேச தரத்துக்கு நிகரான கிரிக்கெட் மைதானங்கள் இல்லை.

இந்த உலகக்கோப்பைக்காக டல்லாஸ் மற்றும் நியூயார்க் நகரில் பிரத்தியேகமாக அமெரிக்க வாரியம் 2 புதிய மைதானங்களை தற்காலிகமாக கட்டமைத்துள்ளது. அந்த மைதானங்களில் செயற்கையாக பிட்ச் பொருத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மைதானத்தை அவசரமாக உருவாக்கிய அமெரிக்க வாரியம் வீரர்கள் பயிற்சி செய்வதற்கு போதுமான வசதிகளையும் இடத்தையும் உருவாக்கவில்லை. அதனால் அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக இந்திய அணியினர் நியூயார்க் நகரில் உள்ள உள்ளூர் பூங்கா ஒன்றில் பயிற்சி எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் பூங்காவில் பயிற்சி எடுப்பது வேடிக்கையாக இருப்பதாக ஐ.சி.சி. மீது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"பூங்காவில் பயிற்சி எடுப்பது விசித்திரமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. இது வித்தியாசமானதாகவும் ஆர்வமானதாகவும் இருக்கிறது. பொதுவாக உலகக்கோப்பைகள் கலாச்சாரம் நிறைந்த கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறுவது வழக்கமாகும். ஆனால் இம்முறை நாங்கள் பொது மக்கள் நடமாடக்கூடிய பூங்காவில் பயிற்சியை எடுக்கிறோம். கிரிக்கெட் பிரபலமில்லாத இந்த புதிய இடத்திற்கு வந்துள்ளது வித்தியாசமான உணர்வை கொடுக்கிறது.

இருப்பினும் எங்களுடைய முதன்மை போட்டிகள் துவங்கும்போது இந்திய ரசிகர்கள் இங்கே வந்து எங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். டாஸ் எப்போதும் எங்களுடைய கையில் இருக்காது. இங்கே அனைத்துமே கொஞ்சம் புதிதாகவும் தெரியாததாகவும் இருக்கிறது. இங்குள்ள மைதானங்களின் வரலாறு அல்லது பிட்ச் எப்படி இருக்கும் என்பதும் தெரியவில்லை. பகல் நேர போட்டிகளில் பனியின் தாக்கம் இருக்காது. எனவே டாஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நம்புகிறேன்" எனக் கூறினார்.

மேலும் செய்திகள்