இது அவமானம்.. ஆனால் கடவுளுக்கு நன்றி - பும்ரா குறித்து ஆஸி.வீரர்
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் 2-வது இன்னிங்சில் பும்ரா பந்துவீசவில்லை.
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், அடிலெய்டு, மெல்போர்னில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருந்தன. மழையால் 3-வது டெஸ்ட் மட்டும் டிராவானது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 185 ரன்களும், ஆஸ்திரேலியா 181 ரன்களும் எடுத்தன. 4 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்திருந்தது. ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா (8 ரன்), வாஷிங்டன் சுந்தர் (6 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 39.5 ஓவர்களில் 157 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலன்ட் 6 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய பந்து வீச்சின் ஆணிவேராக கருதப்படும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகுதண்டு வடத்தில் ஏற்பட்ட பாதிப்பால் நேற்றைய தினம் பந்து வீசாமல் ஓய்வு எடுத்தார். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகிப் போனது.
அதே சமயம் பும்ராவின் தாக்குதல் இல்லாததால் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் சாம் கான்ஸ்டாசும், உஸ்மான் கவாஜாவும் இன்னிங்சை அதிரடியாக தொடங்கினர். ஆஸ்திரேலிய அணி 27 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இரு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 10 விக்கெட் எடுத்த ஆஸ்திரேலியாவின் ஸ்காட் போலன்ட் ஆட்டநாயகன் விருதையும், இந்த தொடரில் 32 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.
இந்நிலையில் 5-வது டெஸ்டின் கடைசி இன்னிங்சில் பும்ராவை எதிர்கொள்ளாததால் மகிழ்ச்சியடைந்ததாக கவாஜா கூறியுள்ளார். அதனாலேயே ஆஸ்திரேலியா வென்றதாக தெரிவிக்கும் அவர் பும்ரா தம்முடைய கெரியரில் எதிர்கொண்ட கடினமான பவுலர் என்றும் பாராட்டியுள்ளார்.
இது பற்றி கவாஜா பேசியது பின்வருமாறு:- "நான் பும்ராவிடம் போல்டானேன். கடைசியில் அவர் காயத்தை சந்தித்தது அவமானம். ஆனால் அதற்காக நாங்கள் கடவுளுக்கு நன்றி சொல்கிறோம். கடைசி இன்னிங்சில் பேட்டிங் செய்வதற்கு சவாலான பிட்ச்சில் அவரை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருந்திருக்கும். ஆனால் அவர் பவுலிங் செய்வதற்கு வராததை பார்த்ததும் நமக்கு இங்கே வெற்றி வாய்ப்பு உறுதியானதாக நாங்கள் நினைத்தோம். அவர் நான் எதிர்கொண்டதிலேயே மிகவும் கடினமான பவுலர்" என்று கூறினார்.