முதல் 2 போட்டிகளில் என்னை அணியில் தேர்வு செய்யாதது நல்லதுதான் - ஜடேஜா
|ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளை பெறும் என்று ஜடேஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4-வது போட்டி மெல்போர்னில் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்த தொடரில் எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில் இந்திய அணி விளையாட உள்ளது. மேலும் கடைசி 2 போட்டிகளில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தலா 1 வெற்றி பெற்றால் 2 - 2 (5) என்ற கணக்கில் இத்தொடர் சமனில் முடியும்.
அது போன்ற சூழ்நிலையில் நடப்பு சாம்பியனான இந்தியா பார்டர் - கவாஸ்கர் கோப்பை தக்க வைத்துக் கொள்ளும். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கடந்த 2 பார்டர் - கவாஸ்கர் கோப்பைகளை இந்தியா ஏற்கனவே வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
அந்த வகையில் (2018/19, 2020/21, 2024/25*) அடுத்தடுத்த 3 பார்டர் - கவாஸ்கர் தொடர்களை வென்று ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளை பெறும் என்று ஜடேஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "3 போட்டிகளுக்கு பின் 1 - 1 என்ற கணக்கில் தொடர் இருப்பதால் நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம். அதனால் அடுத்த இரண்டில் ஒரு போட்டியில் வென்றாலும் நாங்கள் கோப்பையை தக்க வைத்துக் கொள்வோம். ஏனென்றால் நாங்கள் ஆஸ்திரேலியாவில் கடைசியாக விளையாடிய 2 தொடர்களையும் வென்றுள்ளோம்.
எனவே இது மெல்போர்னில் நாங்கள் சிறப்பாக விளையாடுவதற்கான நல்ல வாய்ப்பாகும். ஆம் கடந்த போட்டியில் நாங்கள் நன்றாக விளையாடவில்லை. ஆனால் தற்போது நாங்கள் முக்கியமான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்துகிறோம்.
முதல் 2 போட்டிகளில் நான் விளையாடவில்லை. அது நல்லதுதான். ஏனெனில் இங்குள்ள சூழ்நிலைக்குள் என்னை உட்படுத்தி பயிற்சிகளை எடுக்கும் வாய்ப்பை அது கொடுத்தது. அந்த நேரங்களில் இங்குள்ள சூழ்நிலைகளையும் பிட்ச்சில் எப்படி பேட்டிங், பவுலிங் செய்யலாம் என்பதை உணர்வதற்கு நேரம் கிடைத்தது. அது இங்குள்ள சூழ்நிலைகளுக்கு என்னைப் பழக்கப்படுத்தியது. அது காபாவில் நடைபெற்ற கடந்த போட்டியில் 77 ரன்கள் குவிக்க எனக்கு பெரிய உதவியை செய்தது" என்று கூறினார்.