அவரை அவசரப்பட்டு களமிறக்குவது ஆபத்து - இந்திய அணிக்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஹர்ஷித் ராணா மற்றும் நிதிஷ் ரெட்டி அறிமுகம் ஆகலாம் என்று தகவல்கள் வெளிவருகின்றன.
மும்பை,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அதிவேக ஆடுகளங்களில் ஒன்றான பெர்த்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தங்களுக்குள் இரு அணியாக பிரிந்து பயிற்சி போட்டியிலும் ஆடினர். இவ்வாறு பயிற்சி எடுத்த போது இந்திய வீரர் சுப்மன் கில் காயத்தில் சிக்கினார். இதனால் அவர் முதலாவது டெஸ்டை தவற விடுகிறார். மேலும் கேப்டன் ரோகித் சர்மா முதலாவது டெஸ்டில் ஆடமாட்டார் என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.
இதனால் முதல் போட்டியில் ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கலாம் என்று தகவல்கள் வெளிவருகின்றன்.
இந்நிலையில் நிதிஷ் ரெட்டியை அவசரப்பட்டு ஆஸ்திரேலியாவில் களமிறக்குவது இந்திய அணிக்கு ஆபத்தைக் கொடுக்கும் என்று முன்னாள் வீரர் டோட்டா கணேஷ் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "ஒன்று முழுமையான பவுலரை தேர்ந்தெடுங்கள் அல்லது முழுமையான பேட்ஸ்மேனை தேர்ந்தெடுங்கள். நிதிஷ் ரெட்டியை வேகமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் களம் இறக்குவது எந்த பயனையும் கொடுக்காது. ஏனெனில் நீண்ட வடிவத்தில் விளையாடுவதற்கு அவர் இன்னும் தயாராக இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.