< Back
கிரிக்கெட்
இப்போது சொதப்பினாலும் பரவாயில்லை...அவர்கள் நாக் அவுட் போட்டிகளில் அசத்த வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
கிரிக்கெட்

இப்போது சொதப்பினாலும் பரவாயில்லை...அவர்கள் நாக் அவுட் போட்டிகளில் அசத்த வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

தினத்தந்தி
|
17 Jun 2024 3:37 PM IST

லீக் சுற்றில் தடுமாறிய விராட் கோலி, ரோகித் சர்மா போன்றவர்கள் நாக் அவுட் போட்டிகளில் பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

மும்பை,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. முதல் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா 2-வது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தியது. இதனையடுத்து நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தியதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது. சூப்பர் 8 சுற்றில் இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

முன்னதாக நடப்பு தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் - விராட் கோலி லீக் சுற்றில் அசத்தவில்லை. அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் அரைசதம் அடித்த ரோகித், அதன்பின் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. மறுபுறம் விராட் கோலி 1, 4, 0 ரன்களில் அவுட்டாகி அணிக்கு பின்னடைவையும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் கொடுத்தார்.

இந்நிலையில் லீக் சுற்றில் தடுமாறிய விராட் கோலி, ரோகித் சர்மா போன்றவர்கள் நாக் அவுட் போட்டிகளில் பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். எனவே லீக் சுற்றில் அவர்கள் தடுமாறினாலும் பரவாயில்லை என மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். அத்துடன் இந்த உலகக் கோப்பை முடிந்ததும் டி20 கிரிக்கெட்டில் விடை பெறுவது பற்றி அவர்கள் யோசிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலி, ரோகித் சர்மா போன்றவர்களை தேர்ந்தெடுத்த நீங்கள் இத்தொடரில் அனுபவத்தை பின்பற்றி செல்கிறீர்கள். பொதுவாக உலகக்கோப்பைகளில் அனுபவமிக்க வீரர்கள் முக்கியமான நேரத்தில் அசத்துவார்கள். எனவே தற்சமயத்தில் அவர்களைப் போன்ற சில வீரர்கள் பார்மில் இல்லையென்றாலும் கவலையில்லை. ஆனால் அவர்கள் நாக் அவுட் சுற்றில் அரையிறுதி அல்லது இறுதி போன்ற போட்டிகளில் வெற்றியை தீர்மானிக்கும் இன்னிங்ஸ் விளையாடி கோப்பையை வென்றுக் கொடுக்க வேண்டும்.

அதைத்தான் நீங்கள் சீனியர் வீரர்களிடம் இருந்து எதிர்பார்ப்பீர்கள். அதே சமயம் இளம் வீரர்களும் வெற்றியில் முக்கிய பங்காற்றினால் அது போனஸ். இப்பினும் சீனியர்கள் அதிகமாக பங்காற்ற வேண்டும். அதனாலேயே அவர்களை தேர்வுக் குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த உலகக்கோப்பை முடிந்ததும் அவர்கள் தங்களுடைய டி20 ஓய்வு பற்றிய திட்டங்கள் என்ன என்பதை சொல்ல வேண்டும். அல்லது தேர்வு குழுவினர் அதைப் பற்றி சிந்திப்பார்கள்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்