அஸ்வினுக்கும் எனக்கும் பிரச்சினையா..? வலைதள விமர்சனங்களுக்கு ஹர்பஜன் விளக்கம்
|அஸ்வினுக்கும் தமக்கும் இடையே பிரச்சினை என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் காணப்படுவதாக ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
மும்பை,
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்தார். அவருக்கு பல முன்னாள் இந்நாள் வீரர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங்கும் தன்னுடைய வாழ்த்தை தெரிவித்தார். ஆனால் அதனை கண்ட ரசிகர்கள் சிலர் ஹர்பஜன் கடமைக்கு வாழ்த்து தெரிவித்ததாக விமர்சித்தனர்.
ஏனெனில் ஹர்பஜன் இந்திய அணியில் இருக்கும் போது அறிமுகம் ஆன அஸ்வின் நாளடைவில் அவரை முந்தி நிலையான இடம் பிடித்தார். மேலும் ஓய்வு பெற்ற பின் வர்ணனையாளராக செயல்பட்ட ஹர்பஜன் சிங் சில நேரங்களில் அஸ்வினை மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதனால் அஸ்வினுக்கும் ஹர்பஜனுக்கும் இடையே பிரச்சினை என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் அஸ்வினுக்கும் தமக்கும் சண்டை என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் காணப்படுவதாக ஹர்பஜன் தெரிவித்துள்ளார். ஆனால் அது உண்மையில்லை என்று ஹர்பஜன் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "எனக்கு தேவையான அளவுக்கு மட்டுமே சமூக ஊடகங்களைப் படிக்கிறேன். எனக்கும் அஸ்வினுக்கும் இடையே மோதல், சண்டை, சச்சரவு அல்லது கருத்து வேறுபாடு இருந்தால் நான்தான் அவரிடம் சென்று என்ன பிரச்சினை என்று முதலில் கேட்பேன். ஆனால் அப்படி எதுவுமே இல்லை. அப்படி எதுவும் இருக்கப் போவதுமில்லை.
ஏனெனில் அஸ்வினுக்கு என்ன விதி இருக்கிறதோ அதை பெறுவார். எனக்கு என்ன விதி இருக்கிறதோ அதை நான் பெறுவேன். இந்தியாவுக்காக அஸ்வின் சிறந்த பவுலராக இருக்கிறார். அவருடைய சாதனைகளுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் அவருடன் எனக்கு பிரச்சினை என்று சமூக வலைதளங்களில் மக்கள் மாற்றி எழுதினால் அது அவர்களுடைய கருத்தாகும்.
இந்தியாவில் இரண்டரை நாட்களில் போட்டி முடியும் அளவுக்கு பிட்ச் இருப்பதைப் பற்றியே நான் சில கருத்துகள் தெரிவித்திருந்தேன். அதை வைத்து சமூக ஊடகங்களில் அஸ்வினுடன் எனக்கு பிரச்சினை இருப்பதாக நிறைய விமர்சனங்கள் காணப்படுகின்றன. உண்மையில் எந்த வீரர்களுடனும் எனக்கு பிரச்சினை இல்லை. அவர்களை மதிக்கிறேன். ஏனெனில் நாட்டுக்காக விளையாடுவது எளிதல்ல. அவர்கள் அனைவரும் எனது சக வீரர்கள். அவர்கள் எனது மூத்த அல்லது இளைய சகோதரர்கள்" என்று கூறினார்.