ரோகித், விராட் போல 4000 ரன்கள் அடித்தால் மட்டும் போதுமா? - பாபர் அசாமை விளாசும் ஸ்ரீகாந்த்
|பாபர் அசாம் டி20 கிரிக்கெட்டில் விளையாடக்கூடாது என்று ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.
சென்னை,
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா அயர்லாந்து மற்றும் கனடா ஆகிய ஐந்து அணிகளும் இடம்பெற்று இருந்த குரூப் ஏ வில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
சமீப காலங்களாகவே தடுமாறி வரும் அந்த அணி கடந்த வருடம் பாபர் அசாம் தலைமையில் 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விகளுக்கு பொறுப்பேற்று தம்முடைய பதவியை ராஜினாமா செய்த பாபர் அசாம் மீண்டும் இந்த தொடரை முன்னிட்டு கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்த தொடரிலும் அவருடைய தலைமையில் சுமாராக விளையாடிய பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் அவருடைய கேப்டன்ஷிப் மீது மீண்டும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் பேட்ஸ்மேனாக குறைந்த ஸ்டிரைக் ரேட்டில் தடுமாற்றமாக பேட்டிங் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ள பாபர் அசாம் டி20 கிரிக்கெட்டில் விளையாடக்கூடாது என்று ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போல 4000 ரன்கள் அடித்துள்ள பாபர் அசாம் அதை 112 - 115 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து என்ன பயன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "பாபர் அசாம் டி20 கிரிக்கெட்டில் விளையாட வேண்டாம் என்று நான் கருதுகிறேன். டி20 கிரிக்கெட்டில் நீங்கள் எப்போதும் "டொக், டொக்" என ஆடிக் கொண்டே இருக்க முடியாது. அவர்கள் விராட் கோலி அல்லது ரோகித் சர்மா போல பாபர் அசாம் 4000 ரன்கள் அடித்துள்ளதாக சொல்கின்றனர். ஆனால் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் வெறும் 112 - 115. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள்?" என்று கூறினார்.