இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இவரா? இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்பு
|இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரது ஒப்பந்தம் முடிவடைந்தது. இருப்பினும் ஜூன் 1-ந் தேதி தொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.
அவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பி.சி.சி.ஐ. தொடங்கியது. இதற்காக பி.சி.சி.ஐ. கவுதம் கம்பீர், விவிஎஸ் லக்ஷ்மன், ஆசிஸ் நெஹ்ரா போன்ற இந்திய முன்னாள் வீரர்களை அணுகியதாக செய்திகள் வெளியானது. இதில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக உள்ள கவுதம் கம்பீர் பயிற்சியாளர் ரேஸில் முன்னிலையில் இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.