ஐ.பி.எல்.: சென்னை அணி என்னை வாங்க முடியாமல் போனதற்கு காரணம் இதுதான் - தீபக் சஹார்
|சென்னை அணியால் தான் வாங்கப்படாமல் போனதற்கு என்ன காரணம்? என்பது குறித்து தீபக் சஹார் பேசியுள்ளார்.
மும்பை,
ஐ.பி.எல். மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்று முடிந்தது. இதில் நீண்ட வருடங்களாக ஒரே அணியில் விளையாடி வந்த வீரர்கள் பலர் வேறொரு அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர். அதில் சென்னை சூப்பர் கிங்சில் விளையாடி வந்த தீபக் சஹார் மும்பை அணிக்காக வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தீபக் சஹார் 2018 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வந்தார். மேலும் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனிக்கு நெருக்கமானவர். இதனால் தோனியின் ரசிகர்கள் மத்தியில் இவருக்கும் தனியிடம் உண்டு.
இந்நிலையில் தீபக் சஹார் சென்னை அணியால் தான் வாங்கப்படாமல் போனதற்கு என்ன காரணம்? என்பது குறித்தும், தோனியை தவற விடுவது குறித்தும் சில கருத்துகளை பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "என்னுடைய ஆரம்ப கால கிரிக்கெட்டில் தோனி எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். அவரின் தலைமையின் கீழ் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். இனி அவரின் அறிவுரைகளை தவறவிடுவேன். இம்முறையும் நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்படுவேன் என்ற நம்பிக்கை இருந்தது.
ஆனால் ஏலத்தில் 2-வது நாளில் என்னுடைய பெயர் வந்ததால் சிஎஸ்கே அணி எவ்வளவோ முயற்சித்தும் என்னை வாங்க முடியாமல் போனது. அவர்கள் என்னை வாங்க முடியாமல் போனதன் காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் இரண்டாம் நாளில் சிஎஸ்கே அணியிடம் ரூ.13 கோடிதான் கையிருப்பு இருந்தது.
ஆனாலும் அவர்கள் என்னை 9 கோடி ரூபாய் வரை ஏலம் கேட்டார்கள். அதற்கு மேல் நிச்சயம் அவர்களால் நிதியை ஒதுக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. சென்னை அணி இவ்வளவு தூரம் என்னை வாங்க முயற்சி செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது எனது மனதை மாற்றிக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன். இல்லையென்றால் சென்னை அணியில் இருந்து வெளியேறியது குறித்து நினைக்கும்போது கடினமாக இருக்கும். நான் தோனியை மிகவும் மிஸ் செய்வேன். நிச்சயம் சிஎஸ்கே அணிக்காக திரும்பி விளையாடும் வாய்ப்பு எதிர்காலத்தில் தனக்கு கிடைக்கும்" என்று கூறினார்.