< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். இறுதிப்போட்டி: தோல்வி குறித்து ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறியது என்ன..?
கிரிக்கெட்

ஐ.பி.எல். இறுதிப்போட்டி: தோல்வி குறித்து ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறியது என்ன..?

தினத்தந்தி
|
27 May 2024 12:18 PM IST

17-வது ஐ.பி.எல். தொடரில் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது.

சென்னை,

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த 17-வது ஐ.பி.எல். தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதன் இறுதிப்போட்டியில் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ஷ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 24 ரன்கள் அடித்தார். கொல்கத்தா தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ரசல் 3 விக்கெட்டுகளும், ஸ்டார்க் மற்றும் ராணா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 114 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா 10.3 ஓவர்களிலேயே இலக்கை கடந்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. அந்த அணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 52 ரன்கள் அடித்தார்.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில், "கொல்கத்தா அணி மிக அபாரமாக பந்து வீசியது. எனது பழைய நண்பர் ஸ்டார்க் எங்களுக்கு எதிராக மீண்டும் சிறப்பாக செயல்பட்டார். இன்றைய இரவில் நாங்கள் போதுமான அளவில் செயல்படவில்லை. சில பவுண்டரிகளை அடிக்கலாம் என்று நாங்கள் நம்பினோம். ஆனால், அவர்களின் பந்து வீச்சில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அவர்கள் எங்களுக்கு எந்த வாய்ப்பையும் அளிக்கவில்லை.

அகமதாபாத் போட்டியில் எப்படி பந்து வீசினார்களோ அதேபோலவே இங்கேயும் பந்து வீசினார்கள். இந்த பிட்ச் மிகவும் தந்திரமாக இருந்தது. நாங்கள் 160 ரன்கள் எடுத்திருந்தால் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எங்கள் அணியில் நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன. எங்கள் வீரர்கள் விளையாடிய விதம், பேட்டிங் செய்த விதம் நன்றாக இருந்தது. மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் நாங்கள் எடுத்து இருக்கிறோம். அதை செய்ய நிறைய திறமை வேண்டும். எங்கள் அணி வீரர்கள் எந்த அளவுக்கு தைரியமாக இருந்தார்கள் என்பதை பார்த்து நான் வியந்தேன். இந்த அணியுடன் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். இது நல்ல தொடராக இருந்தது." என்றார்.

மேலும் செய்திகள்