< Back
கிரிக்கெட்
ஸ்டீவ் சுமித்தை வீழ்த்த ஐ.பி.எல். அனுபவம் நிச்சயம் கை கொடுக்கும் - அஸ்வின்
கிரிக்கெட்

ஸ்டீவ் சுமித்தை வீழ்த்த ஐ.பி.எல். அனுபவம் நிச்சயம் கை கொடுக்கும் - அஸ்வின்

தினத்தந்தி
|
14 Nov 2024 7:25 PM IST

ஸ்டீவ் சுமித்தின் விக்கெட்டை வீழ்த்த திட்டம் தன்னிடம் இருப்பதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.

பெர்த்,

ரோகித் சர்மா தலைமையிலான ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராக இந்திய அணியினர் 10 நாட்களுக்கு முன்பாகவே ஆஸ்திரேலியா சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த தொடரில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா விளையாட உள்ளது.

இந்த தொடரில் நவீன கிரிக்கெட்டின் பேப் 4 பேட்ஸ்மேன்ளில் உள்ள விராட் கோலி - ஸ்டீவ் சுமித் இருவரும் நேருக்கு நேர் மோத உள்ளதால் இந்த தொடர் மீது அனைவரது பார்வையும் எழுந்துள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த விரும்புதாக அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் சுமித்தை எவ்வாறு வீழ்த்த வேண்டும்? என்பது குறித்த திட்டமும் தன்னிடம் தெளிவாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், " ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடும் ஆர்வம் உடைய பேட்ஸ்மேன்களில் ஸ்டீவ் சுமித் மிக முக்கியமானவர். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடும் அணுகுமுறையை கொண்ட அவர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் நிச்சயம் புதிய திட்டங்களுடன் வருவார். எனவே அவருக்கு எதிராக எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பது குறித்த தீவிரமான திட்டத்தினை நான் வகுத்து வருகிறேன். இம்முறை அவரை எவ்வாறு வீழ்த்த வேண்டும்? என்பது குறித்த பல்வேறு வழிகளை நான் அறிந்துள்ளேன்.

ஐ.பி.எல் தொடரில் டெல்லி மற்றும் புனே ஆகிய அணிகளில் நான் அவருடன் இணைந்து விளையாடியபோது அவர் வலைப்பயிற்சியில் எவ்வாறு தயாராகிறார்? என்பதை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அவருக்கு எதிராக நான் வலைப்பயிற்சியில் பந்துவீசும்போது அவரை எவ்வாறு வீழ்த்த வேண்டும்? என்று குறித்த பல்வேறு விஷயங்களை தெரிந்து கொண்டேன். ஸ்டீவ் சுமித் தெளிவான அணுகுமுறையை கொண்டவர்.

ஒவ்வொரு முறை அவருக்கு எதிராக பந்துவீச வாய்ப்பு கிடைத்த போதும் அவரை வீழ்த்த முடியுமா? என்பதை சோதித்து பார்த்திருக்கிறேன். ஐ.பி.எல். தொடரில் அவருடன் இணைந்து விளையாடிய அனுபவம் நிச்சயமாக இந்த தொடரில் அவரை வீழ்த்த கைகொடுக்கும் என்று நினைக்கிறேன். அவருக்கு எதிரான தெளிவான திட்டங்கள் இருப்பதினால் நிச்சயம் அவரை இந்து தொடரில் வீழ்த்த முடியும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்