ஐ.பி.எல்.: ரிஷப் பண்டுக்கு பதிலாக டெல்லி அணி இந்த விக்கெட் கீப்பரை ஏலத்தில் எடுக்கலாம் - கவாஸ்கர் கணிப்பு
|டெல்லி அணியில் ரிஷப் பண்ட் தக்க வைக்கப்படாததற்கு பணம் காரணமாக இருக்கலாம் என்று கவாஸ்கர் சமீபத்தில் கூறியிருந்தார்.
மும்பை,
அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலம் வரும் 24, 25-ம் தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் அக்டோபர் 31-ம் தேதி அன்று தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தன.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துள்ளது. பஞ்சாப் 2, பெங்களூரு 3, டெல்லி 4, ராஜஸ்தான் ராயல்ஸ் 6 வீரர்களை தக்க வைத்துள்ளது.
ஆச்சரியம் அளிக்கும் வகையில் ரிஷப் பண்ட் (டெல்லி), லோகேஷ் ராகுல் (லக்னோ), ஸ்ரேயஸ் அய்யர் (கொல்கத்தா), அர்ஷ்தீப் சிங் (பஞ்சாப்) போன்ற முன்னணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள். இவர்களின் அடிப்படை விலை ரூ. 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த 8 ஆண்டுகளாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் விடுவிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக டெல்லி அணி ரிஷப் பண்ட்டை தவிர்த்து இஷான் கிஷனை 15 முதல் 20 கோடி வரை கொடுத்து வாங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போதைய டெல்லி அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அவசியம் தேவை. அதிலும் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் போட்டியை தனியாக நின்று மாற்றக்கூடிய திறமை உள்ள ஒரு வீரரை அந்த அணி வாங்கும். அந்த வகையில் மும்பை அணியில் இடம் பெற்று விளையாடி வந்த இஷான் கிஷனை ரூ. 15 முதல் 20 கோடி குடுத்து வாங்க முயற்சிக்கும் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக டெல்லி அணியில் ரிஷப் பண்ட் தக்க வைக்கப்படாததற்கு பணம் காரணமாக இருக்கலாம் என்று கவாஸ்கர் சமீபத்தில் கூறியிருந்தார். அவரது இந்த கருத்திற்கு ரிஷப் பண்ட், பணம் காரணமில்லை என்று பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.