ஐ.பி.எல். 2025; மார்ச் 2வது வாரத்தில் தொடக்கம்...? - வெளியான தகவல்
|2025 ஐ.பி.எல் தொடர் எப்போது தொடங்கும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது
புதுடெல்லி,
2025 ஐ.பி.எல். தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலம் வரும் 24, 25-ம் தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் கடந்த அக்டோபர் 31-ம் தேதி அன்று தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தன.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துள்ளது. பஞ்சாப் 2, பெங்களூரு 3, டெல்லி 4, ராஜஸ்தான் ராயல்ஸ் 6 வீரர்களை தக்க வைத்துள்ளது.
ஆச்சரியம் அளிக்கும் வகையில் ரிஷப் பண்ட் (டெல்லி), லோகேஷ் ராகுல் (லக்னோ), ஸ்ரேயஸ் ஐயர் (கொல்கத்தா), அர்ஷ்தீப் சிங் (பஞ்சாப்) போன்ற முன்னணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள். இவர்களின் அடிப்படை விலை ரூ. 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் (2025) ஐ.பி.எல் தொடர் எப்போது தொடங்கும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 2025ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் மார்ச் 14ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சீசனை போல 74 ஆட்டங்கள் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், 2026 மற்றும் 2027ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் தொடங்கும் தேதிகள் குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 2026ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் மார்ச் 15ம் தேதி முதல் மே 31ம் தேதி வரையும், 2027ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் மார்ச் 14ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏலம் முடிந்த பின்னர் வெளியாகும் என தெரிகிறது.