ஐ.பி.எல்.2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் நியமனம்
|இவர் தற்போது ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணியின் பயிற்சியாளராக உள்ளார்.
பெங்களூரு,
ஐ.பி.எல். 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது . இந்த தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவில் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தகவல் அனைத்து அணி நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன.
இதற்கு முன்பாகவே பல அணிகளில் பயிற்சியாளர்கள் குழுவில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. டெல்லி, மும்பை, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகளில் தலைமை பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டனர்.
அந்த வரிசையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக ஓம்கார் சால்வி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணியின் பயிற்சியாளராக உள்ளார்.
ரஞ்சி கோப்பையில் 8 வருடங்கள் கழித்து இவரது தலைமையில்தான் மும்பை கடந்த சீசனில் கோப்பையை கைப்பற்றியது. மேலும் இராணி கோப்பையும் கைப்பற்றியது. ஐ.பி.எல். தொடரில் கடந்த வருடன் கோப்பையை கைப்பற்றிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் சால்வி இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.