ஐ.பி.எல்.2025: மும்பை அணி இந்த 5 வீரர்களைத்தான் தக்கவைக்கும் - ஹர்பஜன் கணிப்பு
|ஐ.பி.எல். மெகா ஏலத்திற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணி 5 வீரர்களை தக்க வைக்கும் என ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.
மும்பை,
10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விபரங்களை அறிவிக்க வரும் 31ம் தேதி கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதிலும் மும்பை இந்தியன்ஸ் அணி மீது கூடுதல் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் மும்பை அணியிலிருந்து ரோகித் சர்மா வெளியேறுவாரா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் 5 வீரர்களை தக்க வைக்கும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஹர்பஜன்சிங் கூறுகையில், "மும்பை இந்தியன்ஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடாத அணி. ஆனால் அவர்கள் மிகவும் சிறப்பான அணி. அவர்கள் ஒரு சாம்பியன் அணி. நிச்சயம் அவர்கள் எதிர்காலத்திற்காக ஒரு அணியை உருவாக்க நினைப்பார்கள். அவர்கள் ஹர்திக் பாண்ட்யாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நிச்சயம் நீக்க மாட்டார்கள். மேலும் பும்ரா அணியில் தொடர்வார். அதேபோல சூர்யகுமார் யாதவும் அணியில் இருப்பார்.
இங்கு ரோகித் சர்மா தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடுவாரா? என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. அதே சமயத்தில் ரோகித் சர்மா கேப்டனாக இந்திய அணிக்கு இருந்து ஒரு டி20 உலகக்கோப்பையை வென்று இருக்கிறார். எனவே அவரை அவர்கள் தக்க வைத்துக் கொள்ளவே பெரிய முயற்சி எடுப்பார்கள். இது தொடர்ந்து ஐந்தாவது வீரராக ஒரு வீரரை அவர்கள் தக்க வைப்பார்கள் என்றால் அது திலக் வர்மாவாக இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.