ஐ.பி.எல்.2025: டெல்லி அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் நியமனம்
|அடுத்த ஐ.பி.எல். தொடருக்கான டெல்லி அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன.
ஆச்சரியம் அளிக்கும் வகையில் ரிஷப் பண்ட் (டெல்லி), லோகேஷ் ராகுல் (லக்னோ), ஸ்ரேயஸ் அய்யர் (கொல்கத்தா), அர்ஷ்தீப் சிங் (பஞ்சாப்) போன்ற முன்னணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.
இதற்கு முன்பாகவே பல அணிகளில் பயிற்சியாளர்கள் குழுவில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. டெல்லி, மும்பை, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகளில் தலைமை பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் முனாப் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.