ஐ.பி.எல்.2025: மெகா ஏலத்தில் இடம்பெற்றுள்ள 13-வயது வீரர்
|இவர் ஏற்கனவே ரஞ்சி கிரிக்கெட்டில் குறைந்த வயதில் அறிமுகம் ஆன 4-வது வீரர் என்ற சாதனை படைத்தவர்.
புதுடெல்லி,
18-வது ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் வருகிற 24, 25-ந்தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறுகிறது. ஐ.பி.எல். ஏலத்திற்கு மொத்தம் 1,574 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். அந்த பட்டியல் 10 அணிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களின் தேவை, விருப்பம் அடிப்படையில் ஆயிரம் வீரர்கள் நீக்கப்பட்டு, மொத்தம் 574 பேர் கொண்ட இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதை ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று வெளியிட்டது. இவற்றில் 366 பேர் இந்தியர்கள், 208 வீரர்கள் வெளிநாட்டவர் ஆவர். இவர்களில் 241 வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர்கள்.
இந்த பட்டியலில் பீகாரை சேர்ந்த 13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ளார். இவரது அடிப்படை விலை ரூ.30 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மிக குறைந்த வயதில் ஐ.பி.எல். ஏலத்தில் இடம்பெற்ற வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இவர் ஏற்கனவே ரஞ்சி கிரிக்கெட்டில் குறைந்த வயதில் அறிமுகம் ஆன 4-வது வீரர் என்ற சாதனை படைத்தவர்.