மிரட்டல் பந்துவீச்சு: ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
|ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
பிரிட்ஜ்டவுன்,
9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. சூப்பர்8 சுற்றை எட்டியுள்ள இந்த கிரிக்கெட் திருவிழாவில் குரூப்1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகளும், குரூப்-2ல் வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் சூப்பர்8 சுற்றில் நேற்றிரவு பிரிட்ஜ்டவுனில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஆசிய அணிகளான இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் கோதாவில் குதித்தன. இந்திய அணியில் ஒரே மாற்றமாக முகமது சிராஜிக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். பெங்களூருவில் இறந்த இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் ஜான்சனின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.
'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி அவரும், விராட் கோலியும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். இந்த உலகக் கோப்பையில் தொடக்க ஜோடியாக கைகோர்த்து இதுவரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத கோலி- ரோகித் ஜோடி இந்த ஆட்டத்திலும் சொதப்பியது. ரோகித் சர்மா (8 ரன்) பசல்ஹக்கின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு நுழைந்த ரிஷப் பண்ட் வேகமாக ரன் எடுப்பதில் கவனம் செலுத்தினார். 11 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய பண்ட் 20 ரன்னில் (11 பந்து, 4 பவுண்டரி) ரஷித்கானின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இந்தியாவுக்கு எதிராக 20 ஓவர் போட்டியில் ரஷித்கான் சாய்த்த முதல் விக்கெட் இதுவாகும்.
மறுமுனையில் இந்த தொடரில் முதல்முறையாக இரட்டை இலக்கத்தை கடந்த விராட் கோலியும் (24 ரன், 24 பந்து, ஒரு சிக்சர்) ரஷித்கானின் பந்துவீச்சுக்கே இரையானார். அவர் வீசிய பந்தை கோலி சிக்சருக்கு அடிக்க முயற்சித்து எல்லைக்கோடு அருகில் சிக்கினார். அடுத்து வந்த ஷிவம் துபே (10 ரன்) நிலைக்கவில்லை. அப்போது இந்தியா 4 விக்கெட்டுக்கு 90 ரன்களுடன் தடுமாற்றத்திற்குள்ளானது.
இந்த சூழலில் சூர்யகுமார் யாதவும், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் ஸ்கோரையும் கணிசமாக உயர்த்தினர். சூர்யகுமார் தனக்கே உரிய ஸ்டைலில் சில சிக்சர்களை விளாசி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். அத்துடன் தனது 19-வது அரைசதத்தையும் நிறைவு செய்தார்.
அணியின் ஸ்கோர் 150-ஐ எட்டிய போது சூர்யகுமார் 53 ரன்களில் (28 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்த ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 32 ரன்னில் (24 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார். கடைசி கட்டத்தில் ஜடேஜா 7 ரன்னும், அக்ஷர் பட்டேல் 12 ரன்னும் எடுத்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 181 ரன்கள் குவித்தது. இந்த உலகக் கோப்பையில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இது தான். ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித்கான், பசல்ஹக் பரூக்கி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 182 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தானை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சீர்குலைத்தார். அவரது பந்து வீச்சில் தொடக்க வீரர்கள் ரமனுல்லா குர்பாஸ் (11 ரன்), ஹஸ்ரத்துல்லா ஜசாய் (2 ரன்) அடங்கினர். இப்ராகிம் ஜட்ரனும் (8 ரன்) எளிதில் பணிந்தார். இந்த வீழ்ச்சியில் இருந்து ஆப்கானிஸ்தானால் நிமிர முடியவில்லை. இடையில் குல்படின் நைப் (17 ரன்) அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் (26 ரன்), நஜிபுல்லா ஜட்ரன் (19 ரன்) கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்தனர்.
20 ஓவர்கள் முழுமையாக ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 134 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய தரப்பில் பும்ரா 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 7 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். மற்ற பவுலர்கள் அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து வங்காளதேசத்துடன்...
சூப்பர்8 சுற்றை அமர்க்களமாக தொடங்கியுள்ள இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வங்காளதேசத்துடன் நாளை (சனிக்கிழமை) மோத இருக்கிறது.
ரோகித் சர்மாவை முந்திய கோலி
* இந்த ஆட்டத்திற்கு முன்பாக சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் 2-வது இடத்தில் சமநிலையில் இருந்தனர். இப்போது கோலி (4,066 ரன்), ரோகித் சர்மாவை (4,050 ரன்) முந்தியுள்ளார். முதலிடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (4,145 ரன்) இருக்கிறார்.
* ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் பசல்ஹக் பரூக்கி இந்த ஆட்டத்தில் வீழ்த்திய 3 விக்கெட்டையும் சேர்த்து நடப்பு தொடரில் அவரது விக்கெட் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்தது. 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் ஒன்றில் அதிக விக்கெட் எடுத்தவரான இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்காவின் (2021-ம் ஆண்டில் 16 விக்கெட்) சாதனையை சமன் செய்ய அவருக்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவை.