சர்வதேச டி20 கிரிக்கெட்; 7 ரன்னில் சுருண்ட ஐவரிகோஸ்ட்... சாதனை படைத்த நைஜீரியா
|சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எதிரணியை 7 ரன்னில் சுருட்டி நைஜீரியா வரலாற்று சாதனை படைத்தது.
லாகோஸ்,
2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்பிரிக்க மண்டல தகுதி சுற்று நைஜீரியாவில் நடந்து வருகிறது. இதில் லாகோஸ் நகரில் நேற்று முன்தினம் நடந்த 'சி' பிரிவு ஆட்டம் ஒன்றில் நைஜீரியா - ஐவரிகோஸ்ட் அணிகள் மோதின. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த நைஜீரியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது.
நைஜீரியா தரப்பில் செலிம் சாலு 112 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐவரிகோஸ்ட் அணி, நைஜீரியா வீரர்களின் மிரட்டலான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 7.3 ஓவர்களில் வெறும் 7 ரன்னில் சுருண்டது. இதனால் நைஜீரியா அணி 264 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.
7 ரன்கள் மட்டுமே எடுத்த ஐவரிகோஸ்ட் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த ரன்னில் சுருண்ட அணி என்ற மோசமான சாதனைக்கு சொந்தமானது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எதிரணியை 7 ரன்னில் சுருட்டி நைஜீரியா வரலாற்று சாதனை படைத்தது.
இதற்கு முன்பு கடந்த செம்டம்பரில் நடந்த சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் மங்கோலியா அணியும், 2023-ம் ஆண்டு ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் ஐல் ஆப் மேன் தீவு அணியும் தலா 10 ரன்னில் அடங்கியதே மோசமான சாதனையாக இருந்தது.