< Back
கிரிக்கெட்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி: கம்பீருக்கு போட்டியாக களமிறங்கிய முன்னாள் தமிழக வீரர்

image courtesy:AFP

கிரிக்கெட்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி: கம்பீருக்கு போட்டியாக களமிறங்கிய முன்னாள் தமிழக வீரர்

தினத்தந்தி
|
18 Jun 2024 9:46 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கவுதம் கம்பீர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்தது.

மும்பை,

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளது. மேற்கொண்டு அவர் இந்த பதவியில் தொடர ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பி.சி.சி.ஐ. தொடங்கியது. இதற்காக பி.சி.சி.ஐ. கவுதம் கம்பீர், விவிஎஸ் லக்ஷ்மன், ஆசிஸ் நெஹ்ரா போன்ற இந்திய முன்னாள் வீரர்களை அணுகியதாக செய்திகள் வெளியானது.

இதில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியது. இதனையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று நடைபெற்றது.

கம்பீர் மட்டுமே விண்ணப்பித்து இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த அனுபவ கிரிக்கெட் பயிற்சியாளர் டபிள்யூ வி ராமன் அவருக்கு போட்டியாக களத்தில் குதித்துள்ளார். அவரையும் பிசிசிஐ-யின் கிரிக்கெட் ஆலோசனை குழு நேர்முகத் தேர்வு செய்து இருக்கிறது. அவர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் தமிழ்நாடு அணிக்காக பல ஆண்டுகள் பயிற்சியாளராக செயல்பட்டார். அதன் பின் 2014ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இடம்பெற்றார். அந்த ஆண்டு கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பை வென்றது. அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக கவுதம் கம்பீர் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராமனும் விண்ணப்பித்து இருக்கிறார். கவுதம் கம்பீர் தான் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என உறுதியாக கூறப்பட்ட நிலையில், பிசிசிஐ ஆலோசனை குழுவின் உறுப்பினர்களிடம் தனது திட்டத்தை முன் வைத்து இருக்கிறார் ராமன். அது அவர்களை ஈர்த்ததாக சொல்லப்படுகிறது.

நாளை அல்லது அதற்கு மறுநாள் இந்த நேர்முகத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. நிச்சயமாக கவுதம் கம்பீருக்கு, ராமன் கடுமையான போட்டியாக இருக்கிறார் என பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்